ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday 28 January 2011

நாலு பேருக்கு நன்றி..! - பழைய திரைப்படப் பாடல்

'நாலு பேருக்கு நன்றி... அந்த நாலு பேருக்கு நன்றி...' என்ற பாடலை என் விருப்பப் பாடலாக இன்று பதிவிலிடுகிறேன்...

1972-ல் வெளிவந்த சங்கே முழங்கு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற தத்துவப் பாடல்தான் இந்தப் பாடல். ப.நீலகண்டன் இயக்கத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம் இது.

இந்த தத்துவப் பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்கள் இசையமைக்க, டி.எம்.ஸ் தன் குரல் வழியே இப்பாடலுக்கு உயிரூட்டினார் என்றால் அது மிகையாகாது.

நன்றி யாருக்குச் சொல்வோம்... அதை எளிதாக சந்த நயத்தோடு கண்ணதாசன் விவரிக்கிறார் இப்பாடலில்.. ஆதலால்தான் இவரது பாடல்கள் என்றும் அமரத்துவம் பெற்ற பாடல்களாக விளங்குகிறது...

உதாரணத்திற்கு

"ஆற்று வெள்ளம் தானே ஓடும்
ஆசை வெள்ளம் சொந்தம் தேடும்
சொந்தம் ஏதும் இல்லை என்றால்
அந்த நேரம் நால்வர் வேண்டும்
நாலு பேருக்கு நன்றி..!" என்ற வரிகளைக் கவனியுங்கள்...


யாருமில்லாத அனாதையாக இறந்து விட்டால் அவரை எடுத்துச் செல்ல நால்வர் வேண்டும் அவருக்கு நன்றி சொல்கிறார்...


"இன்பத்தையே பங்கு வைத்தால்
புன்னகை சொல்வது நன்றி
துன்பத்திலே துணை வந்தால்
கண்ணீர் சொல்வது நன்றி...
" - நன்றியை நாம் சொல்வதை சந்த நயத்தோடு எவ்வளவு அழகாக இங்கே கவியரசர் எடுத்துக் 
காட்டுகிறார்...


எனக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!



நாலு பேருக்கு நன்றி..! | Online Karaoke



இப்பாடல் குறித்த சிறப்புத் தகவல்

இப்பாடலில் வரும் கடைசி சரணத்தை கவியரசர் பின்வருமாறு எழுதியிருந்தார்


'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்.
போகும் போது வார்த்தை இல்லை...
போகும் முன்னே சொல்லி வைப்போம்..!

இந்த கடைசி இரு வரிகளை மட்டும் மாற்றிக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று எம்.ஜி.ஆர் விரும்பினார். அதைக் கண்ணதாசனிடமும் தெரிவித்தார்.

சரி... மாற்றித் தருகிறேன் என்று சொன்ன கவியரசர்

'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்.
வார்த்தை இன்றிப் போகும் போது...
மௌனத்தாலே நன்றி சொல்வோம்..!'

என்று மாற்றிக் கொடுத்தார். இதைப் பார்த்த பிறகுதான் எம்.ஜி.ஆருடைய முகத்தில் திருப்திப் புன்னகை பரவியது. காரணம் என்னவெனில் தனது பாடல்களில் வலிமை மிகு எதிர்மறையான வார்த்தைகள் இடம்பெறக் கூடாது என்பதில் மக்கள் திலகம் உறுதியாக இருந்ததுதான்.

கவிஞர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் தான் எழுதியதை மாற்றமாட்டார்கள். ஆனால் அதை மாபெரும் கவியரசர் இயைந்து மாற்றினார் என்றால் அவரது பெருந்தன்மைக்கு அளவில்லை..!




Thursday 13 January 2011

நாடு ரொம்ப கெட்டுப் போச்சு..! - பரவை முனியம்மாவின் கிராமியப் பாடல்


பரவை முனியம்மா அவர்களின் கிராமியப் பாடலை, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் திருநாள் சிறப்புப் பாடலாக இப்பாடலைப் பதிவிலிடுகிறேன்

''நாடு ரொம்ப கெட்டுப் போச்சு...
நாகரீகம் முத்திப் போச்சு..!''
'கோலம் போட்ட பெண்களெல்லாம் கவர்ச்சி காட்டுது..!
கிராப் வைத்துக் கொள்ளுது' என்று பெண்களையும்..
சின்னஞ்சிறு வயதில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் இளம் பிராயத்தினரையும், சினிமா உலகைப் பார்த்து, ஆண், பெண் தடம் மாறுவது... என அனைத்து சீர்கேடுகளையும் ஒரு பிடிபிடிக்கிறார் பரவை முனியம்மா..!

இப்பாடலில் தவில், நாதஸ்வரம், நையாண்டி மேளம் ஏன கிராமிய இசை பின்னியெடுக்கிறது. இப்பாடலின் பின்னணி இசையை பருத்தி வீரன் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள் (திருநங்கைகள் உடன் பாடும் பாடலில் வரும் நையாண்டி மேளம் மற்றும் நாதஸ்வர இசை)

பரவை முனியம்மா வெண்கலக் குரலில் இப்பாடலைக் கேட்டு மகிழுங்கள். பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


நாடு ரொம்ப கெட்டுப் போச்சு..! | Upload Music

இனிய தமிழ்ப்பாடல்கள் வலைத் தளத்தின் அன்பு நேயர்களுக்கு அடியவனின்
இனிய தமிழர் திருநாள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!




Monday 10 January 2011

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல..! - பழைய திரைப்படப் பாடல்..!


''மலர்ந்தும் மலராத பாதி மலர் போல..!'' என்ற அற்புதமான பாடலை இன்று என் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்..!

இரண்டு கணேசன்களும் (சிவாஜி, ஜெமினிசாவித்திரியும் இணைந்து நடித்த மகத்தான படமான "பாசமலர்" 1961- ல் வெளிவந்தது. ராஜாமணி பிக்சர்ஸ் பெயரில் எம்.ஆர்.சந்தானமும், கே.மோகனும் தயாரித்த படம் இது. அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட கதையை ஏ. பீம்சிங் அவர்கள் இயக்கியுள்ளார். அண்ணனும், தங்கையுமாக சிவாஜியும், சாவித்திரியும் வாழ்ந்து காட்டினார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே அட்டகாசமான பாடல்களாகும்.

ஆயினும், இப்பாடல் அன்று முதல் இன்று வரை மட்டுமல்ல, என்றென்றும் காலத்தால் அழியாக் காவியப் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கும்.

கவியரசரின் காவிய வரிகளுக்கு, மெல்லிசை மன்னர்கள் மெல்லிசையமைக்க டி.எம்.எஸ்ஸும், பி.சுசீலாவும் உருகிப் பாடியிருப்பார்கள்... கேட்பவர்களை உருகவைத்து விடுவார்கள்..!

இப்பாடலைக் கேட்காத செவிகளும் செவிகளல்ல என்றுதான் நான் சொல்வேன்.

சிவாஜியும் சாவித்தியும் வெவ்வேறு வீடுகளில் தங்கள் குழந்தைகளைத் தாலட்டும் பாடலான,
"மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக விளைந்த கலையன்னமே நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே
வளர்ப் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே"
- என்ற கவிஞர் கண்ணதாசனின் கற்பனை வளத்திற்குச் சிகரமாய் அமைந்த பாடல். இந்த வரிகளுக்கு நிகரான வேறு வரிகளைக் காணவே முடியாது...

பாடலின் முடிவில் ம்ம்ம்ம்ம்ம்ம்... என டி.எம்.எஸ்ஸின் ஹம்மிங்கும், அவருக்கிணையாக பி. சுசீலாவின் ஆரிராராரிரோ ஹம்மிங்கும் தேனினும் இனியவை... இப்பாடலைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்...

இப்பாடலுக்கு சோகமும் அன்பும் பாசமும் இழைந்த ஒரு தாலாட்டு இசையினை மெல்லிசை மன்னர்கள் பாடல் முழுதும் இழையோட விட்டிருப்பார்கள்..!

எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.. பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!



மலர்ந்தும் மலராத..! | Upload Music


இனி இப்படம் பற்றிய சுவாரசியத் தகவல்கள்


@1961-ல் வெளியான படங்களில் "பாசமலர்", சிவாஜி, ஜெமினி, சாவித்திரி ஆகியோரின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரக்கல்.

@அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுத்தப் படங்களில் இப்படம் 25 வாரங்கள் ஓடி, காவிய அந்தஸ்து பெற்ற படமாகும்.


@1961ம் ஆண்டு வெளி வந்து தமிழகத்தையே உருக வைத்த அண்ணன் தங்கை உறவைச் சித்தரிக்கும் ஒரு நல்ல படமாக மிளிர்ந்தது பாசமலர்.


@இப்படத்தின் கதை கே.பி.கொட்டாரக்கரா என்ற மலையாள எழுத்தாளருடையது. வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். எம்.ஜி.ஆர். படங்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்த இவரை, சிவாஜிக்கு அறிமுகம் செய்து வைத்தவர் ஜெமினி கணேசன். பாசமலர் வெற்றியைத் தொடர்ந்து, சிவாஜியின் படங்களுக்கும் வரிசையாக வசனம் எழுதினார், ஆரூர்தாஸ்.


@ இப்படத்தை இயக்கியவர் பீம்சிங். அவருடைய "பா" வரிசைப் படங்களில் மிகப்பெரிய வெற்றிப்படம் இது. இப்படம் தெலுங்கில் `டப்' செய்யப்பட்டது. பிறகு இந்தி, சிங்களம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டது.



@இப்படத்திற்கு பிறகு சிவாஜியும், சாவித்திரியும் காதலர்களாகவோ, கணவன் மனைவியாகவோ எப்படத்திலும் நடிக்கவில்லை


@1961-1992 வரை தமிழகத்தில் உள்ள குடும்பங்களில் முதல் குழந்தை ஆணாகப் பிறந்து, இரண்டாவது குழந்தை பெண்ணாகப் பிறந்தால், அக்குழந்தைக்கு பாசமலர் படத்தில் சாவித்ரி நடித்த கதாபாத்திரமான 'ராதா' என்ற பெயரைத்தான் வைத்தார்களாம். (இந்த 2 தகவல்களும் நேயர் தந்தது)


நடிகை சாவித்திரி பற்றிய தகவல்கள்

@ இப்படத்தில் நடித்த நடிகை சாவித்திரி ஆந்திராவின் குண்டுர் மாவட்டத்தில் உள்ள சிறாயூரில் பிறந்தவர். நாடகதுறையில் அறிமுகமாகி அங்கிருந்து சினிமாவிற்கு வந்தவர். எட்டாம் வகுப்புவரை படித்திருக்கிறார். 


@ எல்.வி. பிரசாத்தின் சம்சாரம் என்ற படத்தில் அறிமுகமானார். 


@ தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று முந்நூற்று பதினெட்டு படங்களில் நடித்திருக்கிறார். 


@ தமிழில் குழந்தை உள்ளம் பிராப்தம் ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். 
தெலுங்கிலும் நான்கு படங்களை இயக்கியிருக்கிறார்.


@ மகாகவி பாரதியின் மீது மரியாதை கொண்டு எட்டயபுரத்தில் குடிநீர்க் கிணறு ஒன்றை உருவாக்கி தந்திருக்கிறார் சாவித்திரி.



இப்பாடலின் திரை வடிவம் இதோ






Thursday 6 January 2011

பாமாலை அவர் படிக்க..! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)


பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க என்ற பாடல் இன்றைய நேயர் விருப்பப் பாடலாக இடம்பெறுகிறது.

1970-ல் வெளியான கண்மலர் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது... இத்திரைப்படத்தை பட்டு என்பவர் இயக்கியுள்ளார். திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையமைப்பில் வெளிவந்த பாடல் இது...

இப்படத்தில் திரைக்கவித் திலகம் மருதகாசி, கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி, தஞ்சை வாணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

இப்பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுதியுள்ளார். (வானதி பதிப்பகம் வெளியிட்ட கவியரசரின் திரைப்பாடல்கள் வரிசையில் மூன்றாவது தொகுதியில் (1997-ம் ஆண்டு பதிப்பு) பக்கம் 263-ல் 284-ம் பாடலாகக் காணலாம். - ஆதார உதவி: பின்னூட்டத்தில் பதிலளித்த வ. வடிவேலனுக்கு எனது நன்றிகள்)

இந்திய இசைத்துறையில் சகாப்தம் படைத்த, இசைமேதை திரு. பாலமுரளி கிருஷ்ணாவும், பி. சுசீலா இணைந்து பாடிய பாடல் இது...

'அம்பலத்து நடராஜா உன் பலத்தை காட்டுதற்கு
என் குலத்தை தேர்ந்தெடுத்ததேனைய்யா
உன் பதமே கதியென்று நம்பியவர் வீட்டிலே
கண் மறைக்கும் விளையாட்டு ஏனைய்யா..!' என ஆரம்பிக்கும் இப்பாடல் நடராஜரைப் பற்றி பாடப்படுவது அமைந்திருக்கும்... இந்த முதல் நான்கு வரி (தொகையறா )யை இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடியிருப்பார்...

அடுத்து வரம் சரணம், பல்லவிகளை பி.சுசீலா பாடுவார்... இப்பாடலைக் நேயர் விருப்பப் பாடலாகக் கேட்ட, வயதில் பெரியவரான திரு. வி. ஆர். சுப்ரமணியன் அவர்களுக்கு எனது நன்றிகள்... (இவர் சொல்லிய பிறகுதான்,  இப்பாடலை முதன் முதலாக நானே கேட்டேன்). அவருக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


----------

Anonymous Subramanian V R said...

Dear Moganan.


PAZHAMAI INIMAI

Congratulations for your noble venture.

I am a senior citizen and i am in search of a melodious song
beginning lines Pamalai Avar Padikka Poo Malai Nan Thodukka
Vazhnal nadandaya Nataraja. Can you advise me the name of the film
this song appears and whether you will be able to in your list
of old songs so that i can enjoy it.

apologies for writing in english, as senoir citizen i am not
well versed in computer knowledge

thank you from V R Subramanian
23 December 2010 15:35
--------------------------------
இப்படம் பற்றிய சில சுவாரசியத் தகவல்கள்

@ பழம்பெரும் நகைச்சுவை நடிகரான வி.கே.ராமசாமியும், அவரது சகோதரரான வி.கே. முத்துராமலிங்கம் ஆகியோரின் தயாரிப்பில் இப்படம் வெளிவந்தது.

@நடிகர் வி.கே.ராமசாமி 15 படங்களைத் தயாரித்துள்ளார்.

@இப்படத்தில் ஜெமினி கணேசனும், சரோஜா தேவியும் இணைந்து நடித்துள்ளனர்.

@இப்படத்தில் ஓதுவாராக பழம்பெரும் நடிகர் திரு. நாகைய்யா நடித்திருப்பார். இவரது மகளாக சரோஜா தேவி நடித்திருப்பார். இவர்தான் இப்பாடலைப் பாடுவதாக காட்சி அமைக்கப்பட்டது. ஓதுவாராக பாடுவதாக நடிக்கும் இவருக்கு யாருடைய குரலில் பாட வைக்கலாம் என்று சந்தேகம் வந்ததுள்ளது திரையிசைத் திலகம். கே.வி. மகாதேவன் அவர்களுக்கு... நிறைய பாடகர்களை யோசித்துப் பார்த்தாலும், நடராஜன் சார்ந்த தொகையறா என்பதால் இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா இப்பாடலைப் பாடினால் நன்றாக இருக்கும் என முடிவு செய்தார். பிறகு அவரையே இப்பாடலைப் பாட வைத்தார். சரோஜா தேவிக்கு பி.சுசீலா குரல் கொடுத்தார்.

@மெல்லிசை மன்னரான எம்.எஸ். விஸ்வநாதனின் மானசீக இசை குருக்களில் இசைமேதை. பால முரளி கிருஷ்ணாவும் ஒருவர்.

@இப்படத்தின் இயக்க மேற்பார்வை கிருஷ்ணன் - பஞ்சு.




Wednesday 5 January 2011

ஆனந்த விகடனில் நமது இனிய தமிழ்ப்பாடல்கள் தளம்..!


அன்பான வாசகர்களுக்கு...

மோகனனின் வணக்கங்கள்... 15.12.2010 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழின் விகடன் வரவேற்பறையில் 'பழமை இனிமை' என்ற தலைப்பில், நமது இணையதளத்தைப் பாராட்டி வெளியிட்டிருக்கிறார்கள். மேலே உள்ள படத்தை கிளிக்கினால் படம் பெரிதாய் விரியும். பார்த்து மகிழுங்கள்... தொடர்ந்து ஆதரவைத் தாருங்கள்...

இந்த வலைத் தளம் துவங்கியது ஏன்?

கிராமியப் பாடல்களை இணையத்தில் தேடியபோது எங்கும் கிடைக்கவில்லை.. அப்படி அரிதாகக் கிடைத்தாலும் ஒரு சில பாடல்களே இருந்தன. அனைத்தும் கிடைக்கவில்லை. அதையும் மீறி அதற்கு பணம் செலுத்தினால்தான் பாடலைக் கேட்க வேண்டும் என்ற நிபந்தனைகள்...

ஆகவேதான் இதற்கென ஒரு தளம் இருக்கவேண்டும் என முடிவு செய்தேன். 20.10.2009 அன்று இந்த தளத்தை துவக்கினேன். அன்று முதல் இன்று வரை உங்களது ஆதரவின்பால் இதனை பல சிரமங்களுக்கு இடையே நடத்தி வருகின்றேன்.

கிராமிய கீதத்தில் மன்னரான கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி, மருத்துவர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் ஆகியோரின் கிராமியப் பாடல்கள் என்னை எப்போதுமே மகிழ்ச்சியில் வைத்திருப்பவையாகும். 'யான் பெற்ற இன்ப பெறுக இவ்வையகம்' என்ற நோக்கில் செயல்பட்டுக் கொண்டு வந்திருக்கிறேன்.

அண்மையில் நம்பி என்ற வாசகர் ஒருவர் பின்னூட்டமிடுகையில் 'ஆனந்த விகடனில் உங்களது வலைத்தளத்தைப் பார்த்தபிறகு, உங்கள் தளத்திற்கு வந்தேன்' என குறிப்பிட்டிருந்தார்.
---

Anonymous Nambi said...

வணக்கம் மோகனன்,

உங்கள் பதிவினை ஆனந்த விகடன் வாயிலாக கண்டு கொண்டேன். உங்கள் பாடல் தேர்வு வியக்க வைக்கிறது. இவற்றை சேகரிப்பதற்கான உழைப்பு மலைக்க வைக்கிறது.



கவிஞர் தாராபாரதி எழுதிய 'வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம்' என்ற பாடலை அறிவீரகளா? மிகுந்த தன்னம்பிக்கையூட்டும் பாடல். புஷ்பவனம் குப்புசாமி பாடிய ஒரு தொகுப்பில் கேட்டதாக நினைவு.

இப்பாடலை தங்கள் பதிவில் சேர்க்க இயலுமா?

நன்றிகளுடன்,

நம்பி
22 December 2010 11:17
----- 
இத்தகவலைக் கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்தேன். ஆனந்த விகடன் இதழ்களில் எந்த வார இதழ் என்று தெரியவில்லை. தேடி அலைந்தும் பலனில்லை... நம்பியிடம் பின்னூட்டத்தில்கேட்டும் பதிலில்லை.
மற்றொரு வாசகரான அ. சிவகுமார் என்பவர் 15.12.2010 தேதியிட்ட இதழில், 84-ம் பக்கத்தில், விகடன் வரவேற்பறை தலைப்பிட்டு, நமது வலைதளத்தினை 'பழமை இனிமை' என்று உபதலைப்பிட்டு கொடுத்திருக்கிறார்கள் என்று மின்னஞ்சலில் தகவலளித்தார்.
அதற்குள் இரண்டு வாரங்கள் ஓடி விட்டிருந்தன. நூலகத்தில் சென்று கேட்டால் 'அந்த இதழ் போன வருடத்தியது (10 நாட்களுக்குள்) அதனால் மூட்டை கட்டி வைத்து விட்டோம். வேறு நாலகத்தில் போய்ப்பாருங்கள்' என்று விட்டனர்.
தேடி அலைந்தும் கிடைக்கவில்லை. ஆனந்தவிகடன் அலுவலகத்திற்கு நேரிலே சென்றுவிடவேண்டியதுதான் என முடிவெடுத்தேன். அதன்படி இருநாட்களுக்கு முன்பு சென்று, இப்புத்தகத்தை வாங்கினேன். அந்த செய்தியைக் கண்டேன். மனதில் மகிழ்ச்சி துள்ளியது. 'என் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம், வெற்றி' என்று அங்கிருந்த நண்பரிடம் கூறினேன்.
இது ஒரு ஊக்கமூட்டுதலாக இருந்தது. இந்த வெற்றிக்கு வாசகர்களாகிய நீங்கள்தான் முதல்காரணம். தொடரும் உங்களது ஆதரவிற்கு நன்றி. திறமை கண்டு வெளியிட்ட ஆனந்த விகடனுக்கு எனது நன்றி.
(நான் ஆனந்த விகடனில் சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு, பத்திரிகையாளராகவும், புகைப்படக்காரராகவும் பணிபுரிந்தவன். இந்த இதழை வாங்கச் செல்லும் போது, ஆனந்த விகடன் அலுவலக நண்பர்கள், எனை இன்னும் மறக்காமல் இருந்து நலம் விசாரித்தார்கள். அவர்களுக்கும் எனது நன்றிகள்)




Tuesday 4 January 2011

சொந்தமுமில்லே...ஒரு பந்தமுமில்லே...! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)


"சொந்தமும் இல்லே ! ஒரு பந்தமும் இல்லே !
சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார் ! என்ற பாடலை இன்று நேயர் விருப்பப் பாடலாகப் பதிவிலிடுகிறேன்.

1965-ல் வெளியான ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற அட்டகாசமான பாடல் இது. கவியரசர் கண்ணதாசன் எழுதிய இப்பாடலுக்கு அற்புதமாக இசையமைத்தவர்கள் மெல்லிசை மன்னர்களான எம்.எஸ்.வியும் ராமமூர்த்தியும். இப்பாடலைப் பாடியவர்கள் ஜி.கே.வெங்கடேஷ் குழுவினர் ஆவர்...

இப்பாடலின் வரிகளொவ்வொன்றும் வைரம்தான்

'(முடியை) வளர விட்டால் மனிதரெல்லாம் குரங்குகளாவார்...
நாங்கள் வழித்து விட்டால் மறுபடியும் மனிதர்கள் ஆவார்...'

முடியினை வாழ்வியலுக்கு ஒப்பிட்டு

'உள்ள இடத்தில் உள்ள வரைக்கும்
இந்த உலகம் உன்னை மதிக்கும்
இடத்தை விட்டு இறங்கி விட்டால் ஏறி மிதிக்குமே' என்று சுட்டியிருப்பார் கவிஞர் கண்ணதாசன். (இப்பாடலை இயற்றியது பட்டுக்கோட்டையார் இல்லை.)

இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாகக் கேட்ட அன்பு நண்பர் சுந்தரம் சிங்காரம் அவர்களுக்கு எனது நன்றிகள்.

அவருக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... உங்களுக்குப் பிடித்திருப்பின் இலவசமாகப் பதிவிறக்கமும் செயது கொள்ளுங்கள்...



சொந்தமுமில்லே... ஒரு பந்தமுமில்லே..! | Upload Music

------------
Anonymous Sundaram Singaram said...


dear sir

I want to download pattukottai kalyanasundaram thathuva padalgal, especially a song form m.r.radha film in which he acts like a barbor sang that song. kindly guide me to download that song.
17 December 2010 11:56
------------------

இனி சுவாரசியமான தகவல்கள்


@ இப்பாடலில் நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்கள் முடி திருத்தும் தொழிலாளியாக நடித்து அசத்தியிருப்பார். இதற்கு முன்பு வந்த படங்களில், முடி திருத்துபவர்களை படம் பிடித்துக் காட்டியதாக நினைவில்லை. அனேகமாக இதுதான் அவர்களுக்கு மதிப்பளித்து, அவர்களுக்கென ஒரு பாடலையும் கொடுத்திருக்கும் படம் என நினைக்கிறேன். 


@1952- முதல் பணம் என்ற திரைப்படத்தின் மூலம் இசை சாம்ராஜ்ஜியத்தைத் தொடங்கிய மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகியோரின் இசைப்பயணம் இப்படத்தோடு முடிந்து போனது. இவர்கள் ஒன்றாக இணைந்து இசை அமைத்த கடைசி படம் இது. இதன்பிறகு இருவரும் தனித்தனியே இசையமைக்க ஆரம்பித்தனர்.


@இப்பாடலில் எம்.ஆர்.ராதா நடிக்கப் போகிறார். இவருக்கு ஏற்ற குரலை எங்கே தேடுவது, யாரைப் பாடுவது என்ற குழப்பம் வந்திருக்கிறது. கடைசியில் எம்.எஸ்.வி.யிடம் உதவியாளராக இருந்து பின்னாளில் அவரது இசை வாரிசாக பரிமளித்த இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் அவர்களை, இப்பாடலைப் பாடுவதற்கு எம்.எஸ்.வி. தேர்வு செய்தார்.  இவரும் இவரது குழுவினரும் இப்பாடலை பாடுகையில் அமர்க்களம் செய்திருப்பார்கள்... கோரஸில் பின்னியெடுத்திருப்பார்கள்...


@ இப்படத்தின் இயக்குனர் கே.ஜே. மகாதேவன் அவர்கள். இப்படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். 1939-ல் கல்கியின் படைப்பான தியாகபூமியை திரைப்படமாகத் தயாரித்தார்கள். இப்படம் வெள்ளையர்களால் தடை செய்யப்பட்டு, இந்திய விடுதலைக்குப் பின் மீண்டும் வெளியிடப்பட்டது. இப்படத்தின் கதாநாயகனாக நடித்தவர்தான் இந்த கே.ஜே. மகாதேவன் அவர்கள்.


@நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்த வேடங்களிலேயே, இப்படத்தில் நடித்த வேடம்தான் எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று அவரே குறிப்பிட்டிருக்கிறார்.


@ இப்படம் ஆங்கில எழுத்தாளர் P.G. Wodehouse எழுதிய 'If I Were You' என்ற ஆங்கில நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.
---------------------------------------------------

இப்பாடலின் திரை வடிவம் இதோ..:



(ஒலி மற்றும் திரை வடிவம் கொடுத்து உதவிய சுக்ரவதனீ குழுமத்தின் பேராசிரியர் அவர்களுக்கும் எம்.கே.சாந்தாராம் அவர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..!)