வணக்கம்...
நம்முடைய நாட்டுப்புற, கிராமியப் பாடல்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவும், உங்களுக்குப் பிடித்த பழைய திரைப்பாடல்களை உங்களிடம் கொண்டு சேர்க்கவும்தான் இந்த வலைக்குடில்..
உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்... முடிந்தவரை எடுத்துத் தருகிறேன்... இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!
தொடர்புக்கு: moganan@gmail.com
ட்விட்டரில் தொடர
Tuesday, 19 July 2022
ராக்கெட் தயாரிக்கும் சென்னை ஐஐடி | ஹைபர்லூப் ரயில் தயாரிக்கும் ஐஐடி| IIT...
Wednesday, 6 July 2022
கண்ணிமைக்கும் நேரத்துல…. காதல் கொண்டேனடி! - கிராமிய பாடல்
(பல்லவி)
கண்ணிமைக்கும் நேரத்துல…. காதல் கொண்டேனடி…
கற்கண்டு நீ கையில் வந்தா
கடிச்சி தின்பேனடி
ஓஞ்சி போனேனடி உன்னை ஒரு
தடவை பார்த்ததுல
காஞ்சி போறேனடி உன்னை காணாத
பொழுதினிலே
கண்ணிமைக்கும் நேரத்துல….
காதல் கொண்டேனடி…
கற்கண்டு நீ கையில் வந்தா
கடிச்சி தின்பேனடி...
(சரணம் - 1)
வரன் தேடி ஊரு ஊரா பார்க்காத
பொண்ணு இல்ல
வரம் போல நீ கிடைச்ச உன்ன
மிஞ்ச யாரும் இல்ல
வரன் தேடி ஊரு ஊரா பார்க்காத பொண்ணு இல்ல
வரம் போல நீ கிடைச்ச உன்ன மிஞ்ச யாரும் இல்ல
ஊரெல்லாம் பாக்கும்படி
கல்யாணம் பண்ணிக்கலாம்
நான் ஒண்டி மட்டும் ஒன்ன
பாக்க தாழ்ப்பாளை போட்டுக்கலாம்
அடி சிரிக்கும் சிங்காரியே…
நூறு ரூபாய்க்கு சில்லரை கொடு
சீஸன் இல்லா மாம்பழமே…
உன் கன்னத்தை பறிக்க விடு…
நீ நிமர நிலைகொலைஞ்சேன்…
அந்த நெனப்புல கைய பிசைஞ்சேன்…
(கண்ணிமைக்கும் நேரத்துல….
காதல் கொண்டேனடி…
கற்கண்டு நீ கையில் வந்தா
கடிச்சி தின்பேனடி…)
சரணம் - 2
வழவழக்கும் வாழை இலை… இடுப்புக்கு
அழகானது
வண்ணங் கொண்ட நட்சத்திரம்
ஒளிரும் கண்ணானது
என்ன சொல்லி நான் பாட…
எதுவும் நீயானது
என் எண்ணமெல்லாம் ஒன்னத்தானே
நெனச்சி அசைபோடுது
நான் திருடி பழக்கமில்ல
ஆனா திருடனானேடி
நீ பாக்காத நேரத்துல ஒன்னை
பாத்து ரசிச்சேனடி
இது நெலையா தொடராம என்னை
நேசிக்க வேணுமடி
கண்ணிமைக்கும் நேரத்துல…. காதல் கொண்டேனடி…
கற்கண்டு நீ கையில் வந்தா கடிச்சி தின்பேனடி
ஓஞ்சி போனேனடி உன்னை ஒரு தடவை பார்த்ததுல
காஞ்சி போறேனடி உன்னை காணாத பொழுதினிலே
கண்ணிமைக்கும் நேரத்துல…. காதல் கொண்டேனடி…
கற்கண்டு நீ கையில் வந்தா கடிச்சி தின்பேனடி...
(இப்பாடலை எழுதியவர் யாரென்று அறியேன். ஆனால் எனக்கு மிகவும் பாடல் இது. சென்னையில் இருந்து ஆத்தூர் செல்லும்போது, விக்கிரவண்டி மோட்டல்களில் பேருந்தை நிறுத்தும்போது இந்த பாடலை கேட்டு ரசித்து நின்றிருக்கிறேன். அற்புதமான கிராமியப் பாடல் இது. துள்ளலான இசையும், பாடகரின் குரலும் சினிமா உலகிற்கே நம்மை இட்டுச்செல்லும்)
Tuesday, 18 March 2014
ஏ... ஒத்தையடிப் பாதையில..! - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் கிராமிய பாடல்
கிராமிய பாடலைக் கேட்டு ரொம்ப நாளாச்சு... அதை பதிவிலிட்டும் ரொம்ப நாளாச்சு இல்லையா... இன்று அந்த குறையை போக்கிடலாம். எனக்குப் பிடித்த இந்த பாடல் நிச்சயம் உங்களையும் கவரும்.
கிராமியப் பாடகர்களான விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினர் பல்வேறு பாடல்களைப் பாடியிருக்கின்றனர். அதில் இன்று ஒரு பாடலைப் பதிவிலிடுகிறேன்.
'ஏ... ஒத்தையடிப் பாதையில... அத்தை மக போகையில...' என்று துவங்கும் இந்தப்பாடல் எசப்பாட்டு வகையினைச் சேர்ந்தது. அத்தை மகள் ஒத்தையடிப் பாதையில் போவதை பார்க்கும் முறை மாமன், அவளைப் பற்றி ஒரு பாடலை எடுத்து விடுகிறான். அதற்கு பதிலாக அத்தை மகளும் எசப்பாட்டை எடுத்து விடுகிறாள்.
எனக்குப் பிடித்த இந்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள். பிடித்திருந்தால் இலவசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்.
*****************************************
இப்பாடலில் நான் கண்ட சுவாரசியத் தகவல்கள்
@ கோரஸ் குரலில் வரும் வாக்கியங்கள் அந்தகால காதலை கண்முன் நிறுத்துவது போல் இருக்கும். 'ஆசை கெடக்குது ஆசை கெடக்குது அஞ்சறைப் பெட்டிக்குள்ள... சீவன் கெடக்குது சீவன் கெடக்குது செந்தூரப் பொட்டுக்குள்ள...' என்று கோரஸ் பாடுவார்கள்.
@ இதில் முதல் வரி, அந்த காலப் பெண்களின் காதலை நயமாக எடுத்துச் சொல்லும். நாள் முழுக்க ஏர்பிடித்து, உயவு செய்து, வெள்ளாதை செய்து, வீட்டில் சேகரித்து வைக்கும் தானியங்களை வீட்டிலுள்ள பெண்கள் எடுத்து சமைப்பர். தன் வீட்டு நிலத்தில் விளைந்த தானியங்கள் என்றாலே தனிப்பெருமைதானே. அப்படிப்பட்ட தானியங்களில் சமையல் பொருட்களும் அடக்கம். அது அஞ்சறைப் பெட்டிக்குள் மூடி அடங்கியிருக்கும். அதுபோல் தனது காதலை, அப்பெண்கள் அஞ்சறைப் பெட்டிக்குள் அடக்கி வைத்திருப்பது போல் அடக்கி வைத்திருந்தனர் என பொருள் கொள்ளலாம்.
@ இரண்டாவது வரி ஆண்களின் காதலைச் சொல்வது. ஆண்மகன் ஒரு பெண்ணின் நெற்றியில் பொட்டு வைத்தால், அவள்தான் தனது மனைவி என்பதை அது அடையாளப்படுத்திவிடும். அதைத்தான் இங்கே மிக நாசூக்காக, ஆணினுடைய சீவன் (உயிர் மூச்சு) செந்தூரப் பொட்டுக்குள்ளே என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
@ இப்பாடலில் எதிரொலிப்பு முறை (எக்கோ) பயன்படுத்தியிருக்கும் அழகு, இப்பாடலுக்கு இன்னும் அழகூட்டியிருக்கிறது எனலாம்.
@ ஆண் பாடகரும், பெண் பாடகியான விஜயலட்சுமி அம்மாவின் குரலும் நம்மை நிச்சயமாக வசீகரிக்கும்
@ நையாண்டி மேளமும், உருமி சத்தமும் இப்பாடல் முழுக்க உடன்வந்து, நம்மை உற்சாகப்படுத்தும். இந்த இசையால் துள்ளாட்டம் போடாமல் இருக்கமுடியாது.
@ இதில் வரும் ட்ரம்பெட் இசையை (அது என்ன இசைக்கருவி என்று எனக்கு சரியான புரிதல் இல்லை. அதனால், என் அறிவுக்கு எட்டியவரை, இதை ட்ரம்பெட் எனக் குறிப்பிட்டிருக்கிறேன். சரியான பெயரை கூறினால் திருத்திக் கொள்வேன்), இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ஈசன் படத்தில் வரும் பாடலான 'ஜில்லா விட்டு ஜில்லா வந்த...' என்ற பாடலில் அப்படியே பயன்படுத்தி இருக்கிறார் என்று தோன்றுகிறது. இப்பாடலை கேட்டுவிட்டு, இது உண்மையா இல்லையா என்று பின்னூட்டத்தில் தெரிவியுங்களேன்.
@ கார்த்தி நடித்த 'பருத்திவீரன்' படத்தில் இடம்பெறும் ஊரோரம் புளியமரம் என்ற பாடலில் வரும் 'ஆளில்லாத காட்டுக்குள்ள பயலே... ரவுசு பண்ணும் சின்னத்தம்பி' என்று பாடும் குரல் மதுரை எஸ். சரோஜா அவர்களின் குரல் (தகவல் சரிதானா). அவர் இந்த பாடலில் கோரஸின் அடிகளை முதலிலேயே பாடுகிறார். குரல் அவருடையதுதான் எனக் கருதுகிறேன்.
@ இப்பாடலில் ராமநாதபுரம், பட்டுக்கோட்டை பகுதி வட்டார வழக்குச் சொல்களான 'அம்மாளு..', 'அய்யாவு...' என்ற பதங்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்பகுதியைச் சேர்ந்த மக்களின் பாடலாக இருக்கலாம். (இதுவும் எனக்கு தெளிவாகத் தெரியவில்லை)
நன்றி: விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினர்
Thursday, 13 March 2014
சின்னஞ்சிறு கண்மலர்..! - நேயர் விருப்பப் பாடல்
நமது தளத்தின் புதியநேயர் ஜார்ஜ் நவரத்னராஜ் அவர்களின் வேண்டுகோளை பூர்த்தி செய்ய வருகிறது, பதிபக்தி படத்தில் இடம்பெற்ற ‘சின்னஞ்சிறு கண்மலர்… செம்பவள வாய்மலர்…’ என்ற பாடல். இன்று இப்பாடலை நேயர் விருப்பப்பாடலாக பதிவிலிடுகிறேன்.
இத்திரைப்படத்தை புத்தா பிக்சர்ஸ் பெயரில் ஜி.என்.வேலுமணி தயாரித்தார். பீம்சிங் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், டி.எஸ்.பாலையா, வி.நாகையா, கே.ஏ.தங்கவேலு, சந்திரபாபு, சாவித்திரி, எம்.என்.ராஜம், விஜயகுமாரி, அங்கமுத்து உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.
பாடல்களை மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுத, மெல்லிசை மன்னர்களான எம்.எஸ். விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் இசையமைத்திருக்கின்றனர். இப்படத்தின் பாடல்களை டி.எம். சௌந்தரராஜன், ஏ.எம்.ராஜா, சந்திரபாபு, வி.என்.சுந்தரம், ஜிக்கி, சுசீலா ஆகியோர் பாடியிருக்கின்றனர். இப்படம் மார்ச் 14, 1958-ல் வெளியான வெற்றிப்படமாகும்.
நேயருக்கு பிடித்த இந்த பாடல், தாலாட்டுப் பாடலாகும். இப்பாடலை பி. சுசீலா பாடியிருக்கிறார். உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இந்த பாடலை கேட்டு மகிழுங்கள். விரும்பினால் இப்பாடலை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
சின்னஞ்சிறு கண்மலர்... | Muziboo
******************************************
|
@ இப்படத்தின் தயாரிப்பாளரான ஜி.என். வேலுமணி, தனது ஆரம்பகாலத்தில், கோவையில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்ட ‘சொர்க்கவாசல்’ படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்தார். சென்னை வந்ததும், இயக்குனர் ஏ. பீம்சிங், கதை- வசன ஆசிரியர் சோலைமலை ஆகியோருடன் நட்புறவு ஏற்பட்டது. இவர்கள் மூன்று பேரும் கூட்டு சேர்ந்து, 'புத்தா பிக்சர்ஸ்' என்ற படக்கம்பெனியை தொடங்கினர். இந்த கம்பெனியின் முதல் படம்தான் இந்த 'பதிபக்தி'.
@ இயக்குனர் பீம்சிங்கும் சிவாஜி கணேசனும் ‘ப’ வரிசை வெற்றிப்படங்களைத் தந்தவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய முதல் படமும் இதுதான். இதன் பெயரும் ‘ப’வில்தான் தொடங்கியது.
@ மெல்லிசை மன்னர்களான எம்.எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணைக்கும் ‘ப’ என்ற வரிசையில் அமைந்த முதல் படமும் இதுதான்.
@ இப்படத்தின் படத்தொகுப்பு (எடிட்டிங்) வேலையையும் இயக்குனர் பீம்சிங்கே செய்திருந்தார்.
@ சிவாஜி கணேசன் நடித்த படத்தில், முழுப்பாடல்களையும் ‘மக்கள் கவிஞர்’ பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய படம் இது.
@ இப்படத்தில் மொத்தம் 9 பாடல்கள். அம்பிகையே முத்து மாரியம்மா … , திண்ணைப் பேச்சு வீரரிடம்…, கொக்கரக்கொக்கரக்கோ சேவலே… உள்ளிட்ட சூப்பர்ஹிட் பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
@ இப்படத்தில் இடம்பெற்றுள்ள கொக்கரக்கொக்கரக்கோ சேவலே… பாடல் ஏற்கெனவே நமது தளத்தில் வெளியிட்டிருக்கிறேன். கேட்க விரும்புவோர் இங்கே கிளிக்கவும்…
@ இத்திரைப்படம் அப்போது அமோக வெற்றி பெற்று, சென்னை கெயிட்டி , திருச்சி ஜூபிடர், கோவை கர்நாடிக், மதுரை கல்பனா ஆகிய தியேட்டர்களில் 100-நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது.
@ சின்னஞ்சிறு கண்மலர்… என்ற பாடலில் ‘மக்கள் கவிஞர்’ அழகிய தமிழ்ச்சொற்களை, மிக எளிமையாகப் பயன்படுத்தி தமிழுக்கு பெருமை சேர்த்திருப்பார்.
@ இந்த பாடலின் ஒரு வரியில் அன்பே ஆராரோ…ஆரிரோ…. என்று வரும். மழலைக்கு இந்த ‘அன்பே’வை பயன்படுத்தி இருப்பது, எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. தற்போது இந்த வார்த்தை எதற்கு பயன்படுத்தப்படுகிறதே என்பதை நான் உங்களுக்கு சொல்லத் தேவை இல்லை.
பாடல் உதவி: சுக்ரவதநீ நண்பர்கள் குழாம்.
(Pathipakthi Tamil film released in March 14, 1958. This film cast is Sivaji Ganesan, Gemini Ganesan, Chandrabapu, Savithri, M.N.Rajam. Directed by A. Beemsingh. Songs penned by Pattukkottai kalyanasundaram. music composed by M.S. Viswanathan and Ramamoorthy)
Friday, 7 March 2014
நீலக்கடலின் ஓரத்தில்..! - நேயர் விருப்பப் பாடல்
கோலார் தங்கச்சுரங்கப் பகுதியில் இருக்கும் அன்பு நண்பர் ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டதற்காக, ‘அன்னை வேளாங்கன்னி’ என்ற படத்தில் ‘நீலக் கடலின் ஓரத்தில்… நீங்கா இன்பக் காவியமாம்…’ என்ற பாடலை நேயர் விருப்பப் பாடலாக இன்று பதிவிலிடுகிறேன்.
1971-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15, அன்று இந்த திரைப்படம் வெளியானது. வேளாங்கன்னி மாதாவின் புகழைச் சொல்லும் விதமாக எடுக்கப்பட்ட படம் இது. இப்படத்தில் ஜெயலலிதா, பத்மினி, கே.ஆர்.விஜயா, ஆகியோர் நடித்திருக்கின்றனர். அப்போது இளம்பிராயப் பருவத்தில், சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்த கமலஹாசனும் இப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தினை இயக்கியவர் கே. தங்கப்பன்.
இப்படத்தின் முதல் பாடலாக இடம்பெறும் 'நீலக்கடலின் ஓரத்தில்…' என்ற பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுத, ஜி. தேவராஜன் இசையமைப்பில் டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் பி. மாதுரி ஆகியோர் இணைந்து பாடியிருக்கின்றனர்.
இப்பாடலை உங்களுக்குப் பிடித்திருந்தால் கேட்டு மகிழுங்கள். தேவையெனில் இலவசமாய் பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்….
நீலக்கடலின் ஓரத்தில்... | Muziboo
- ---------------------------------------------------------
Ramachandran K said... -
dear moganan..
thanks a lot for your hardwork i like this song very much its rhythm. in asathapovadhu yaaru programme has done in a double role at the end he shows that only one man have you seen that programme. one more request of film : annai velanganni song: neela kadalin orathil endra padalai thedavum please.
regards
ramachandran
kolar gold fields
- 18 February 2011 14:24
இனி சிறப்புத் தகவல்கள்
@ இப்படத்தின் இயக்குனர் கே. தங்கப்பன் நடன இயக்குனர். இப்படத்தின் நடன இயக்குனர், திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு ஆகியவற்றை இவரே கவனித்துக் கொண்டார்.
@ இப்படத்தில் கமலஹாசனும், கமலஹாசனை முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்.சி. சக்தியும், இப்படத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றி இருக்கின்றனர். இப்படத்தின் ஒரு பாடலில் கமல் நடனமாடி இருப்பார்.
@ இப்படத்தில் ஜெமினி கணேசன், மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், தேங்காய் சீனிவாசன். எஸ்.வி.சுப்பையா, ஸ்ரீகாத்ந், தேவிகா, சச்சு ஆகியோர் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர்.
@ இப்படத்திற்கான பாடல்களை கண்ணதாசன் மட்டுமில்லாமல் கவிஞர் வாலி, அய்யாசாமி ஆகியோர் எழுதி இருக்கின்றனர்.
@ இப்பாடலின் இடம்பெறும் சரணத்தில், தென்னை உயர பனை உயர, செந்நெல் உயர்ந்து வளம் செழிக்கும் என்று எழுதியிருப்பார்.
இது ஔவைப்பாட்டி, குலோத்துங்க சோழனின் முடிசூட்டு விழாவில்,
வரப்புயர நீர் உயரும்,
நீர் உயர நெல் உயரும்,
நெல் உயர குடி உயரும்,
குடி உயர கோல் உயரும்,
கோல் உயர கோன் உயரும். - என்று சோழனுக்காக பாடிய
வாழ்த்திலிருந்து சிலவரிகளை மெலிதாகக் கையாண்டிருப்பார் கண்ணதாசன்.
இதிலிருந்து தமிழ் செய்யுள்களில் கவியரஞர் கண்ணதாசன் எவ்வளவு புலமை கொண்டிருந்தார் என்பது விளங்கும்.
@ இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி. தேவராஜன். மலையாளத்தில் மிகப்பெரிய இசையமைப்பாளர். மலையாளத்தில் 200 படங்களுக்கு மேல் இசையமைத்த ஜாம்பவான். தமிழில் இவர் 10 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அதில் அன்னை வேளாங்கன்னியும், துலாபாரமும் குறிப்பிடத்தக்கவை.
@ கே.ஜே. யேசுதாஸின் குரலில், துலாபாரம் படத்தில் இடம்பெறும், ‘காற்றினிலே… பெருங் காற்றினிலே…’’ பாடல் இவரது இசையால் மிளிர்ந்தவைதான். இவரது இசையில் கானதேவன் யேசுதாஸ் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். ஐயப்பன் பக்தி பாடலான, ‘ஹரிவராசனம்… விஸ்வமோகனம்…’ என்ற பாடலுக்கு இசையமைத்தவரும் இந்த ஜி. தேவராஜன்தான். மலையாளத்தில் நமது எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை ‘கடல் பாலம்’ (1970) என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவரும் இவர்தான்.
@ இந்தப்படத்தை நடன இயக்குனரான கே. தங்கப்பன் தயாரித்தார். படத்தை இயக்கும் பொறுப்பு முதலில் கேமராமேன் வின்சென்ட்டிடம் இருந்தது. முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும், இருவரிடையே பிரச்சனை வரவும், வின்சென்ட் ஒதுங்கிக் கொண்டார். அதனால் தங்கப்பன் இந்தப்படத்தை இயக்கி முடிக்க வேண்டியதாயிற்று.
@ இப்படத்தில் உதவி நடன இயக்குனராக பணியாற்ற வந்த கமலஹாசன், படப்பிடிப்பில் சூறாவளியாய் அனைத்து வேலையையும் செய்யத் துவங்கியதால் உதவி இயக்குனராகவும் உருமாறினார். இவருடன் மற்றொரு உதவி இயக்குனராக பணியாற்றிய ஆர். சி. சக்தி, பின்னாட்களில் கமலஹாசனை முதன்முதலாக கதாநாயகனாக்கி ‘உணர்ச்சிகள்’ படத்தில் அறிமுகப்படுத்தினார். இப்படம் வெளிவருவதற்கு முன்பே ‘பட்டாம்பூச்சி’ வெளிவந்ததால் இப்படம் அந்த பெருமையை தட்டிச்சென்று விட்டது.
@ இப்படத்தில் நர்ஸாக நடித்திருப்பார் ஜெயலலிதா. இவர் உள்பட படத்தில் நடித்த பல திரை உலகப்பிரபலங்கள், இப்படத்திற்காக சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்திருந்தனர். இதை ஜெயலலிதாவே, ஒருமுறை மேடையில் பேசும்போது குறிப்பிட்டிருக்கிறார்.
(Annai Velankanni Tamil film released in August 15,1971. The film starred Gemini Ganesan, Jayalalitha, Padmini and K. R. Vijaya. Kamal Hassan briefly appears in an uncredited role as Jesus Christ. The film was directed by K. Thangappan. It comprises three stories pertaining to Christian beliefs. Velankanni, where the film is set is a real village in India, and has a large church dedicated to the Virgin Mary and Jesus.this film songs penned by Kaviyarasar Kannadasa, vaali. Music composed by G. Devarajan. "neelak kadalain orathil" song sung by T.M.S. and Mathuri.)
Wednesday, 26 February 2014
தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி..! - நேயர் விருப்பப் பாடல்
இன்று முதல் வாரத்திற்கு ஒருமுறை கிராமிய பாடலோ அல்லது வாசகர்கள் கேட்கும் அரிதான பாடல்களோ இடம் பெறும் என உறுதி கூறுகிறேன்...
*******
இனி அன்பு நண்பர் யூர்கன் கிருகியர் கேட்ட 'தட்டிப்பார்த்தேன் தொட்டாங்குச்சி' பாடல் இன்றைய நேயர் விருப்பப் பாடலாக இடம்பெறுகிறது. (2010-ல் கேட்ட பாடல் இது... மன்னித்துக் கொள்ளுங்கள் தோழரே... நீண்ண்ண்ண்ண்ட தாமதத்திற்கு...)
1983-ல் டி. ராஜேந்தரின் இயக்கத்தில் வெளியான 'தங்கைக்கோர் கீதம்' படத்தில் இடம்பெற்ற சோகப் பாடல் இது. படத்தின் கதை என்னவென்றால், குடிகாரத்தந்தையால், அம்மா இறந்துவிட, பத்துவயது சிறுவனாக இருக்கும் டி. ராஜேந்தர் தன் தங்கையை ஒற்றை ஆளாக நின்று காப்பாற்றுகிறார். அப்படி வளர்க்கப்படும் தங்கைக்கு படாதபாடுபட்டு திருமணம் செய்து வைக்கிறார், திருமணமான பின்பு அண்ணனையே தூக்கி எறிகிறாள்... இருவரின் பாசமும் என்ன ஆயிற்று என்பதுதான் இப்படம். தங்கையாக நளினி நடித்திருப்பார்.
வரதட்சணை கொடுமையை மையமாக சித்தரித்து எடுக்கபட்ட படம் இது.
இப்படத்தின் பாடல்கள், இசை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அனைத்தும் டி. ராஜேந்தர் அவர்களேதான். இந்த பாடலைப்பாடியதும் அவரேதான்...
இனிமே பாட்டப் போடறேன் வாங்க...
இனிமையான பாட்டை கேக்கலாம் நீங்க...
கேட்டபின் சந்தோஷமா போங்க...
இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட நண்பர் திரு. யூர்கன் கிருகியருக்கு எனது நன்றி. எங்களுக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.. உங்களுக்குப் பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!
தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி..! | Muziboo
---------------------------------
நன்றி
@ இந்த படத்தை தயாரித்தது டி. ராஜேந்தரின் மனைவி உஷா ராஜேந்தர். தஞ்சை சினி ஆர்ட்ஸ் என்ற பெயரில் தயாரித்து இருக்கிறார். இதற்குப் பிறகுதான் சிம்பு சினி ஆர்ட்ஸ் உருவானது.
@ கதாநாயகனாக டி. ராஜேந்தர் நடித்திருக்க, மற்றொரு நாயகனாக சிவகுமார் நடித்திருப்பார்.
@ நடிகர் சத்யராஜ், இந்த காலகட்டத்தில் வளரத்துடிக்கும் ஒரு நடிகராக இருந்திருக்கிறார். இப்படத்தில் இவருக்கு வில்லன் வேடம். டைட்டில் கார்டில் செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி, இடிச்சபுளி செல்வராஜ் ஆகியோர் பெயர்களோடு சத்யராஜ் பெயரும் இதில் இடம்பெற்றிருக்கும்.
@ இப்படத்தில் 'தஞ்சாவூரு மேளம்... தாலி கட்டும் நேரம்...' என மற்றொரு சூப்பர்ஹிட் பாடலும் இடம்பெற்றிருக்கிறது.
@ இதில் மற்றொரு சுவரசியம் என்னவென்றால், இப்படத்தில் அறிமுகமாகும் ஒரு நடிகருக்கு டைட்டில் கார்டில் தனியாக பேரை போட்டிருப்பார்கள்.
@ அந்த அறிமுக நடிகர், மறைந்த நகைச்சுவை நடிகர் திரு. நாகேஷ் அவர்களின் மகன் ஆனந்த்பாபு. இவர் அறிமுகமான படம் இதுதான்.
Tuesday, 14 June 2011
செவலக்காளை ரெண்டு பூட்டி..! - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்!
"செவலக்காளை ரெண்டு பூட்டி... மாமன் சேத்துமேட்டை உழுது வாரான்..!" என்ற கிராமியப் பாடலை இன்று என் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்.
கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் மெல்லிசை கலந்த துள்ளலிசைப் பாடல்...
அக்காலத்தில் வயல்வெளிகளில் உழவு உழும் போதும், நாத்து நடும் போதும் களைப்பு தெரியாமல் இருக்க, தெம்மாங்கு பாடல்களை பாடி களைப்பு தெரியாமல் வேலையை முடிப்பார்கள். கூட இருக்கும் பெண்கள் குலவை போட்டு பாடுபவரை உற்சாகப் படுத்துவார்கள். அதை கேட்கும் சுகமே தனி சுகம்தான்.
இதுதான் இப்பாடலின் பின்னணி. எனது மாமன் உழவு செய்கிறான், அதற்கு ஏற்றாற் போல் நாற்று நடவேண்டும், சம்பா நெல் நடவேண்டும் என வேண்டுகோள் வைக்கிறாள் தலைவி. தலைவியின் கூற்றை கூட இருக்கும் பெண்கள் குலவை இட்டு ஆமோதிக்கிறார்கள். தலைவனோ மழை பெய்ய வேண்டும், நாடு செழிக்க வேண்டும் அதற்கும் குலவையிடுங்கள் என்கிறான். அதற்கும் குலவையிடுகிறார்கள்
நையாண்டி மேளம், உருமி, குலவை இசை, புல்லாங்குழல் என கிராமத்திற்கே உரிய வாசனையை இப்பாடலில் புகுத்தியிருப்பார் புஷ்பவனம் குப்புசாமி. கேட்க கேட்க பரவசப்படுத்தும் பாடல் இது....
எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்க... பிடிச்சிருந்தா இலவசமா பதிவிறக்கம் பண்ணிக்கோங்க...உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க... ஓட்டு போட்டீங்கன்னா.. நிறைய பேருக்கு நமது கிராமியப் பாடல்கள் சென்றடையும்...
செவலக்காளை..! | Upload Music
(நன்றி: திரு. கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினர்)
Could u pl. find and include the foll. song. Thank u.
Song : Sinnansiru kanmalar
sembavala wai malar sinthidum alage vaarayo Vannathamil manikkam...
arriro anbe arraro... Paappa un appavai parthalthan thookkamo sainthe madithanil sainthalthan thookkamo naali ulagu nallorkal kaiyil namum makilvom...
- George Navaretnarajah. March 5, 2014