ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, 30 November 2010

பிறக்கும் போதும் அழுகின்றாய்..! - பழைய திரைப்படப்பாடல்


''பிறக்கும் போதும் அழுகின்றாய்... இறக்கும் போதும் அழுகின்றாய்...'' என்ற பாடலை என் விருப்பப் பாடலாக இன்று பதிவிலிடுகிறேன். இப்பாடல் அன்று பல இந்தியத் தலைவர்களையே உருக வைத்திருக்கிறது... இப்பாடல் உருவான விதம், சுவாரசியமான சம்பவம் இரண்டு பின்னிணைப்பாக கொடுத்துள்ளேன்...

1960-அன்று, கவிஞர் கண்ணதாசனின் தயாரிப்பில், சந்திரபாபு கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் கவலை இல்லாத மனிதன்.


இப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் மிகச்சிறந்த தத்துவப் பாடலாக இன்று மட்டுமல்ல... என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் இது...

கவிஞர் திரு. கண்ணதாசனின் தனது காவிய வரிகளில் நாலே நான்கு வரிகளில் ஒரு பல்லவியும், நான்கு நான்கு வரிகளில் இரண்டு சரணங்களும் மிக அழகாக எழுதியிருப்பார்...

இந்த வரிகளுக்கு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் & ராமமூர்த்தி அவர்கள் இசையமைத்திருக்க... நகைச்சுவை நாயகர் சந்திரபாபு குரல் கொடுத்திருப்பார்... கேட்டுப் பாருங்கள் இப்பாடலை... 

உங்களுக்குப் பிடித்திருப்பின் இப்பாடலை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்... உங்களுக்குப் பிடித்த பாடலை என்னிடம் கேளுங்கள் இயன்றவரை தேடி எடுத்துத் தருகிறேன்
----

இப்பாடல் பிறந்த விதம்

(சந்திரபாபுவும், மெல்லிசை மன்னர் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் ஆவர்...)

சந்திரபாபு : " விசு, இந்த படத்துலே எனக்கு " டப்பாங்குத்து " பாடல் எல்லாம் வேணாம் ! இந்தியிலே சைகால் பாடுவது மாதிரி ஒரு தத்துவப் பாடல் பாடணும்டா ! " (சோகமான பாடல்களை லோ பிட்ச்சில் பாடுவதில் இவர் வல்லவர்)

மெல்லிசை மன்னர் :  " ஆமாம் , நீ போடுகிற போட்டுக்கு இது வேறயா! சகிக்காதுடா! பேசாமல் இருடா!" இருவருக்கும் சண்டை நடந்தது ! - வாக்கு வாதம் ! இறுதியில் சந்திரபாபு வென்றார் !

-
என்ன பாட்டு அது ? கண்ணதாசன் யோசிக்க ஆரம்பித்தார் ! 

அந்த சமயத்தில் தான் மாபெரும் கவிஞர் பட்டுக்கோட்டை
 கல்யாண சுந்தரம் அவர்கள் காலமானார். இந்த துயர செய்தி கண்ணதாசனை கலங்க வைத்தது. என்ன செய்தும் அவரை சமாதானப் படுத்த முடியவில்லை. இதனை நேரில் பார்த்த சந்திரபாபு , கண்ணதாசனை சமாதானம் செய்யும் நோக்கில் கீழ்கண்டவாறு பேசினார் :

" பட்டுக்கோட்டை ஒரு பெரிய மேதை. அவர் புகழுடன் இருக்கும் போதே மறைந்து விட்டார். இப்போ அவர் போய்ட்டாரு - நாம் போக வேண்டிய நாளும் வரும் ! ஆனா, நாம் மறைந்த பின்னரும் எல்லோரு நம்மை நினைத்து அழ வேண்டும் ! நாம் இறந்ததற்காக யாரும் நிம்மதி அடையக்கூடாது ! " 

என்று அவர் சொன்னதைக் கேட்டவுடன்... கண்ணதாசனுக்கு பாடல் பிறந்தது! எழுதினார் !

" பிறக்கும் போதும் அழுகின்றாய் !
இறக்கும் போதும் அழுகின்றாய் !
ஒரு நாளேனும் கவலை இல்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே ! " 

ஆக,பட்டுக்கோட்டையார் மறைந்த பிறகு அவரை நினைத்து, சந்திரபாபுவின் தூண்டுதலால் கவிஞர் இந்த பாடலை எழுதினார்! இதுதான் இந்த பாடலின் பிண்ணனி !

இந்த பாடல் குறித்த ஒரு சுவாரசியமான சம்பவம்

1965 - ம் வருடம் இந்தியா - பாகிஸ்தான் யுத்தம் வந்தபோது, எல்லையில் வீரர்களை மகிழ்விக்க நம் தமித் திரை உலகம் போன போது , திரும்பி வரும் வழியில் தமிழகத்துடன் நெருங்கிய தொடர்புடைய குடியரசுத் தலைவராக அப்போதிருந்த டாக்டர் .எஸ் . ராதாகிருஷ்ணன் தமிழ் திரை உலகத்தினரை குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றனர் . குடியரசுத்தலைவர் அவர்களை வரவேற்று " ராஜ மரியாதையோடு " விருந்து கொடுத்து உபசரித்தார் !

சிவாஜி கணேசன் , ஜெமினி கணேசன் , சாவித்திரி, தேவிகா , பத்மினி, ஜெயலலிதா, பி.பி. ஸ்ரீநிவாஸ், கண்ணாதாசன் , மெல்லிசை மன்னர் , பி. சுசீலா, ஏ.எல். ஸ்ரீனிவாசன், இவர்களுடன்... சந்திரபாபு ஆகியோர் விருந்துக்கு சென்றனர்.

விருந்து முடிந்தவுடன் , ஒரு பெரிய கூடத்தில் அனைவரும் அமர்ந்து குடியரசுத் தலைவருடன் உரையாடினர்.
 சிறிது நேரம் கழித்து...

குடியரசுத் தலைவர் : "யாராவது பாடுங்களேன்..?"

மெல்லிசை மன்னர்: ( தயக்கத்துடன்.....) "ஆர்மோனியப் பெட்டி இல்லாமல் எப்படி..?"

குடியரசுத்தலைவர் : "அவ்வளவுதானே ! இதோ ஆர்மோனியப் பெட்டியை கொணரச் சொல்கிறேன்!"

பத்தே நிமிடங்களில் அந்த மாபெரும் மாளிகையில் இருந்து எங்கிருந்தோ ஓர் ஆர்மோனியப் பெட்டி மெல்லிசை மன்னர் முன்பு வைக்கப் பட்டது !

முதலில் பி.பி.எஸ் பாடினர்!
"காலங்களில் அவள் வசந்தம்..!"

குடியரசுத்தலைவர் பாடலை மிகவும் ரசித்தார் !


பின்பு சந்திரபாபு பாட ஆரம்பித்தார் !

"பிறக்கும் போது அழுகின்றாய்..!
இறக்கும் போது அழுகின்றாய்..!"


அந்த பாடலை தன மெய் மறந்து கேட்ட டாக்டர் .எஸ் . ராதாகிருஷ்ணன் "அடடா..! என்ன அர்த்தமான பாடல் ! பிரமாதம்..!" என்று மனம் திறந்து பாராட்ட, இதனைக் கேட்ட சந்திரபாபுவுக்கு குஷி தாங்கவில்லை!

தனது இருக்கையில் இருந்து துள்ளிக் குதித்து, வேகமாகச் சென்று குடியரசுத்தலைவரின் மடியில் அமர்ந்து அவர் தோளில் கையைப் போட்டு , அவர் தாடையை பிடித்து 
"கண்ணா..! ரசிகன்டா நீ..!" என்று உணர்ச்சி வசப்பட்டு சொல்லிவிட்டார் !

குடியரசுத்தலைவர் என்றும் பாராமல் சந்திரபாபு செய்த 
செய்கை சிவாஜிக்கும், ஜெமினிக்கும் ஆத்திரத்தை உண்டாக்க, பாட்டை நிறுத்தச் சொல்லி மெல்லிசை மன்னரை அவர்கள் முறைக்க...

ராதாகிருஷ்ணன் அவர்களோ... பதிலுக்கு அவர் சந்திரபாபுவின் தாடையை பிடித்து மகிழ... ஒரே "ஜிலு.. ஜிலு..." என்று அந்த சூழ்நிலை அமைந்தது !


தகவல் உதவி: திரு. எம்கேஆர். சாந்தாராம்

இப்பாடலின் திரை வடிவம்


pirakkum pothum alukinrai
Uploaded by danceupanddown. - Watch original web videos.
Saturday, 27 November 2010

சமரசம் உலாவும் இடமே..! - பழைய திரைப்படப் பாடல்


''சமரசம் உலாவும் இடமே... நம் வாழ்வில் காணா... சமரசம் உலாவும் இடமே...'' என்ற பாடலை என் விருப்பப் பாடலாக இன்று பதிவிலிடுகிறேன்.

28.09.1956-அன்று, கல்பனா பிக்சர்ஸ் தயாரிப்பில், திரு. ஆர்.ஆர், சந்திரன் இயக்கதில் வெளியான திரைப்படம்  ரம்பையின் காதல்.

இப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் அமரகாவியப் பாடலாக இன்று மட்டுமல்ல... என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும். எல்லோருடைய மரணத்திற்குப் பிறகு இருக்கும், வசிக்கும், உறங்கும் இடம் எதுவெனில் அது சுடுகாடுதான்.

இங்கு ஆண்டி ஆனாலும் சரி, அரசன் ஆனாலும் சரி... மேலோர் ஆனாலும் சரி, கீழோர் ஆனாலும் சரி... எல்லோரும் இங்கு சமம் என்பதை அமர கவிஞர் திரு. மருதகாசி தனது மந்திர வரிகளில் கோடிட்டுக் காட்டியிருப்பார்...

இந்த வரிகளுக்கு இசையரசர் டி.ஆர். பாப்பா இசையமைத்திருக்க... வெண்கலக் குரலோன் திரு சீர்காழி கோவிந்தராஜன் குரல் கொடுத்திருப்பார்... கேட்டுப் பாருங்கள் இப்பாடலை... நாம் பிறந்து என்ன சாதித்திருக்கிறோம்... இறப்பின் பின் எங்கு சாந்தமாவோம் என்று இப்பாடல் நன்கு உணர்த்தும்...

உங்களுக்குப் பிடித்திருப்பின் இப்பாடலை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்... உங்களுக்குப் பிடித்த பாடலை என்னிடம் கேளுங்கள் இயன்றவரை தேடி எடுத்துத் தருகிறேன்


சமரசம் உலாவும் இடமே..! | Musicians Available

இப்பாடலின் திரை வடிவம் இங்கே...நன்றி: யூ டியூப்Wednesday, 17 November 2010

ஏ புள்ள ராசாத்தி..! - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்..!

'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ளலிசைப் பாடல்...

ஆரம்பத்திலிருந்தே துள்ளலிசை உங்களை மட்டுமல்ல உங்களு காதையும் ஆட வைக்கும்... நையாண்டி மேளம்.. நாதஸ்வரம், புல்லாங்குழல் என கிராமிய இசை பின்னியெடுக்கும்... அடடா... தமிழிசைன்னா... தமிழிசைதான்...

'ஏ புள்ள ராசாத்தி... என் பாட்ட கேளாத்தி... ஏரிக்கரை பக்கம் வாடி ஏலே செல்லம்மா..' என தலைவன் கேட்க பதிலிருக்கிறாள் தலைவி... எசப்பாட்டு வடிவத்தில் இப்பாடல் ஒலிக்கிறது...

எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்க... பிடிசிருந்தா இலவசமா பதிவிறக்கம் பண்ணிக்கோங்க...உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க... ஓட்டு போட்டீங்கன்னா.. நிறைய பேருக்கு நமது கிராமியப் பாடல்கள் சென்றடையும்...


ஏ புள்ள ராசாத்தி...! | Upload Music

நன்றி: திரு. புஷ்பவனம் குப்புசாமி & அனிதா குப்புசாமி