ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

Friday, 18 March 2011

வீடு வரை உறவு..! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

'வீடு வரை உறவு.. வீதி வரை மனைவி...' என்ற காலத்தால் அழிக்க முடியா தத்துவப் பாடலை இன்றைய நேயர் விருப்பப் பாடலாகப் பதிவிலிடுகிறேன்.

ஜூலை 14, 1962 -ல் வெளியான பாதகாணிக்கை என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலிது. இப்படத்தினை இயக்கியவர் கே. சங்கர். மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பில், கவியரசு கண்ணதாசனின் அமர வரிகளில், டி.எம்.எஸ்ஸின் உணர்ச்சிய மயமான குரலில் ஒலிக்கிறது இப்பாடல்.

இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசனின் அண்ணனாக வரும் அசோகன் அவர்கள் ஒரு கால் இல்லாமல், இரு கை கட்டைகளை ஊன்றிக் கொண்டு, தற்கொலை செய்து கொள்ளப் போகும் போது பாடும் பாடலாக இப்பாடல் அமைந்திருக்கும்... இப்பாடலின் வரிகளை நான் சொல்லத்தான் வேண்டுமா என்ன..?

எனக்குப் பிடித்த இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட நண்பர் டான் சமுசா அவர்களுக்கு எனது நன்றி. எங்களுக்குப் பிடித்த இந்த தத்துவப் பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்.


வீடு வரை உறவு...! | Online Karaoke
---------


Anonymous Don Samusa said...

எனக்கு பிடித்த பாடல் ஒன்று, அதன் வரிகள் எனக்கு நினைவில்லை...

அதில் அசோகன் அவர்கள் ஊனமுற்ற வேடத்தில் கடலை நோக்கி


சென்று கொண்டே பாடுவார்...

அந்த பாடலை எப்படியாவது அனுப்புங்கள்...
2 March 2011 14:15
--------------------------------

இனி சில சுவாரசியத் தகவல்கள்

@ பட்டினத்தாரின் பாடலிருந்து இப்பாடலை கவிஞர் கண்ணதாசன் உருவாக்கினார்.

மனையாளு மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயின்மட்டே
யினமான சுற்ற மயானம் மட்டே வழிக்கேது துணை
தினையாமள வௌளளவாகினு முன்பு செய்ததவந்
தனையாள வென்றும் பரலோகஞ் சித்திக்குஞ் சத்தியமே

மற்றும்

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழி அம்பு ஒழுக 
மெத்திய மாதரும் வீதி மட்டே விம்மி விம்மி இரு
கைத்தல மேல் வைத்தழுமை ந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே

இந்த இரண்டு பாடலும் பட்டினத்தார் எழுதியதே. இரு பாடலும் ஒரே பொருளைத்தான் தருகின்றன. 

இதன் பொருள் என்னவெனில், செல்வமும் உறவும் வருவது வீடுவரைதான். கதறி அழும் மனைவி வருவது வீதி வரைதான். அடித்துக் கொண்டு அழும் பிள்ளையின் விஜயம் சுடுகாடு மட்டும்தான். ஆனால் கடைசி வரை கூட வருவது செய்த புண்ணியமும் பாவமும் மட்டும்தான் என்றார் பட்டினத்தார்.



கண்ணதாசன் இதைத் தழுவி எழுதிய இப்பாடலில் கடைசி வரியான 'பாவமும் புண்ணியமும்தான் கடைசிவரை கூடவரும்' என்ற வாக்கியத்தை விட்டு விட்டார். இதைப்பற்றி நண்பர் ஒருவர் வினவியதற்கு கண்ணதாசன் சொன்ன பதில் “அப்படி ஓர் அருமையான வாக்கியத்தை சொல்லும் உரிமை பட்டினத்தாருக்கே உண்டு. அதனால் தான் அதைப் பாடலில் குறிப்பிடவில்லைஎன்றார். 

@ உலக நாயகன், பத்மஸ்ரீ கமலஹாசன் (குழந்தை நட்சத்திரமாக) நடித்த மூன்றாவது படம் இது.

@ இப்பாடலில் வரும் பெண் குரல் எல்.ஆர். ஈஸ்வரியின் குரலாகும். இவருடைய உண்மையான பெயர் எல். ராஜேஸ்வரி ஆகும்.

கோரஸ் பாடிக் கொண்டிருந்த இவரை முதன் முதலில் 'நல்ல இடத்து சம்பந்தம்' படத்தில் இவருக்கு 4 பாடல்களை கொடுத்து பாடகியாக்கினார்  அப்படத்தின் இசையமைப்பாளரான கே.வி. மகாதேவன்.

டைட்டிலில் பெயர் போடும் போது குழப்பம் வந்தது. ஏற்கனவே எம். ராஜேஸ்வரி என்ற பெயரில் ஒரு பாடகி இருந்ததால், இவருக்கு எல்.ஆர்.ஈஸ்வரி என பெயர் மாற்றினார் இப்படத்தின் தயாரிப்பாளரான ஏ.பி.நாகராஜன்.




Tuesday, 8 February 2011

ஆசையே அலை போலே..! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)



ஆசையே அலை போலே நாமெலாம் அதன் மேலே..! என்ற அற்புதமான பாடலை, இன்று நேயர் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்..!


ஜனவரி
14, 1958, தைத் திருநாளன்று ஏ.கே.வேலன் கதை, திரைக்கதை, இயக்கம் தயாரிப்பில் வெளியான தை பிறந்தால் வழி பிறக்கும்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலாகும்.

கவியரசர் கண்ணதாசனில் வைர வரிகளுக்கு
, திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் அட்டகாசமான இசையமைப்பில், திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய பாடலிது...

இப்பாடலில் மனிதன் வாழ்வை இரண்டே சரணங்களில் அடக்கி விடுவார் கவிஞர். முதல் சரணத்தில் பருவ வயதும்
, இரண்டாம் சரணத்தில் முதுமை வாழ்வும் பற்றி எளிதாக விளக்கி விடுவார்... வாழ்க்கையில் எது வரவு எது செலவு என்பதை மூன்றாவது சரணத்தில் சொல்லி விடுவார்... அந்த வரிகள்....

வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?’

இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாகக் கேட்ட பழனிவேல் கிருஷ்ணசாமி அவர்களுக்கு எனது நன்றிகள். இப்பாடல் எனக்கும் பிடித்த பாடலாகும். உங்களுக்குப் பிடித்திருப்பின் இப்பாடலை நீங்கள் இலவசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.



ஆசையே அலை போலே..! | Upload Music

------------

Anonymous Palanivelu Krishnasamy said...

Mr. Moganan,

I was able to visit your blogspot because of Ananda Vikatan. I find your blogspot interesting.

I am ar ardent fan of old songs. Recently, while travelling by a bus, I happened to hear a song sung by SP Balasubramaniam. That impressed me very much.


I tried in the net to find and get it downloaded but in vain. Will you please get it for me?
The song is AASAIYE ALAI POLE NAMELLAM ADHAN MELE (Resung of the old popular song)
Thank you.

K. Palanivelu
10 January 2011 10:41
-----------------------------

இனி சுவாரசிய செய்திகள்

@அக்காலத்தில் கோடம்பாக்கத்தில் ரயில்வே கிராஸிங் மட்டுமே இருந்தது. மேம்பாலம் கிடையாது. ரயில் வந்து செல்லும் வரை இருபுறமும் இரயில்வே கேட்டை பூட்டி விடுவார்கள். சினிமா பிரபலங்கள் எல்லோரும் அந்த கேட்டில் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு முறை ரயில்வே க்ராஸிங் சிக்னலுக்காக, கண்ணதாசன் காத்திருந்த போது, இப்பாடலை சிகரெட் பாக்கெட்டில் எழுதி வைத்தாராம். சிகரெட் பெட்டியில் சிந்திய வரிகள்... பின்னாளில் தமிழக மக்களின் செவிகளிலும் தேனிசையாய் சிந்தியது இப்பாடல்.

@இப்பாடலின் இசையமைப்பாளர் திரை இசைத் திலகம். கே.வி.மகாதேவன் அவர்கள்... இவர் பாட்டுக்குத்தான் மெட்டு போடுவார் ! பாட்டு எழுதும் கவிஞர்களை வதைக்காமல், அவர்கள் எழுதிக் கொடுத்ததை அப்படியே பயன் படுத்துவார் ! அப்படி அந்த பாட்டு மெட்டுக்குள் அடங்கவில்லை என்றால் " விருத்தம் " ஆக்கி பாட்டின் சுவையைக் கூட்டிவிடுவார் !

@1940 களின் ஆரம்பத்தில் – கே.வி. மகாதேவன் அவர்கள் சேலம் ‘மாடர்ன் தியேடர்ஸ்
-ல் உதவி இசை அமைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார்!

அப்போது அதிபர் டி.ஆர். சுந்தரம் அவர்கள் ஓர் இளைஞனை மகாதேவனிடம் அழைத்து சென்று "மகாதேவா
, இவருக்கு குரல் வளம் எப்படி இருக்கின்றது என்பதை பரீட்ச்சை செய்து அனுப்பு!" என்றார் !

மகாதேவனும் அந்த இளைஞன் குரலை சோதனை செய்து பின்னர் வரச் சொல்லிப் பணித்தார் ! அவர் அங்கேயே தயங்கி நிற்கவே " ஊருக்குப் போவதற்கு பணம் இருக்கா ? " என்று அவரைப் பார்த்து கேட்டார் ! அந்த இளைஞன் உதட்டைப் பிதுக்கவே , மகாதேவன் அந்த இளைஞனுக்கு 2 .00 ரூபாய் பணம் கொடுத்து, கூடவே ஒரு சட்டையும் கொடுத்து அனுப்பினார் !

அந்த இளைஞன் யார் தெரியுமா
?  - அவர்தான் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் !

@திருச்சி லோகநாதன் சம்பள விஷயத்தில் கறார் பேர்வழி, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த தூக்குத் தூக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களையும் பாட வாய்ப்பு வந்தபோது ஒரு பாடலுக்கு ரூ 500 சம்பளம் கேட்டார், தயாரிப்பாளர்கள் சம்பளத்தை குறைக்கச் சொல்ல, ‘மதுரையிலிருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார், அவரை பாடச் சொல்லுங்க என்று கூறிவிட்டார். திருச்சி லோகநாதன் சுட்டிக்காட்டிய அந்த மதுரைக்காரர்தான் தூக்குத் தூக்கி படத்தில் பாடினார், அவர்தான் நம்ம டி. எம். செளந்தரராஜன்.




Tuesday, 30 November 2010

பிறக்கும் போதும் அழுகின்றாய்..! - பழைய திரைப்படப்பாடல்


''பிறக்கும் போதும் அழுகின்றாய்... இறக்கும் போதும் அழுகின்றாய்...'' என்ற பாடலை என் விருப்பப் பாடலாக இன்று பதிவிலிடுகிறேன். இப்பாடல் அன்று பல இந்தியத் தலைவர்களையே உருக வைத்திருக்கிறது... இப்பாடல் உருவான விதம், சுவாரசியமான சம்பவம் இரண்டு பின்னிணைப்பாக கொடுத்துள்ளேன்...

1960-அன்று, கவிஞர் கண்ணதாசனின் தயாரிப்பில், சந்திரபாபு கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் கவலை இல்லாத மனிதன்.


இப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் மிகச்சிறந்த தத்துவப் பாடலாக இன்று மட்டுமல்ல... என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் இது...

கவிஞர் திரு. கண்ணதாசனின் தனது காவிய வரிகளில் நாலே நான்கு வரிகளில் ஒரு பல்லவியும், நான்கு நான்கு வரிகளில் இரண்டு சரணங்களும் மிக அழகாக எழுதியிருப்பார்...

இந்த வரிகளுக்கு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் & ராமமூர்த்தி அவர்கள் இசையமைத்திருக்க... நகைச்சுவை நாயகர் சந்திரபாபு குரல் கொடுத்திருப்பார்... கேட்டுப் பாருங்கள் இப்பாடலை... 

உங்களுக்குப் பிடித்திருப்பின் இப்பாடலை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்... உங்களுக்குப் பிடித்த பாடலை என்னிடம் கேளுங்கள் இயன்றவரை தேடி எடுத்துத் தருகிறேன்
----

இப்பாடல் பிறந்த விதம்

(சந்திரபாபுவும், மெல்லிசை மன்னர் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் ஆவர்...)

சந்திரபாபு : " விசு, இந்த படத்துலே எனக்கு " டப்பாங்குத்து " பாடல் எல்லாம் வேணாம் ! இந்தியிலே சைகால் பாடுவது மாதிரி ஒரு தத்துவப் பாடல் பாடணும்டா ! " (சோகமான பாடல்களை லோ பிட்ச்சில் பாடுவதில் இவர் வல்லவர்)

மெல்லிசை மன்னர் :  " ஆமாம் , நீ போடுகிற போட்டுக்கு இது வேறயா! சகிக்காதுடா! பேசாமல் இருடா!" இருவருக்கும் சண்டை நடந்தது ! - வாக்கு வாதம் ! இறுதியில் சந்திரபாபு வென்றார் !

-
என்ன பாட்டு அது ? கண்ணதாசன் யோசிக்க ஆரம்பித்தார் ! 

அந்த சமயத்தில் தான் மாபெரும் கவிஞர் பட்டுக்கோட்டை
 கல்யாண சுந்தரம் அவர்கள் காலமானார். இந்த துயர செய்தி கண்ணதாசனை கலங்க வைத்தது. என்ன செய்தும் அவரை சமாதானப் படுத்த முடியவில்லை. இதனை நேரில் பார்த்த சந்திரபாபு , கண்ணதாசனை சமாதானம் செய்யும் நோக்கில் கீழ்கண்டவாறு பேசினார் :

" பட்டுக்கோட்டை ஒரு பெரிய மேதை. அவர் புகழுடன் இருக்கும் போதே மறைந்து விட்டார். இப்போ அவர் போய்ட்டாரு - நாம் போக வேண்டிய நாளும் வரும் ! ஆனா, நாம் மறைந்த பின்னரும் எல்லோரு நம்மை நினைத்து அழ வேண்டும் ! நாம் இறந்ததற்காக யாரும் நிம்மதி அடையக்கூடாது ! " 

என்று அவர் சொன்னதைக் கேட்டவுடன்... கண்ணதாசனுக்கு பாடல் பிறந்தது! எழுதினார் !

" பிறக்கும் போதும் அழுகின்றாய் !
இறக்கும் போதும் அழுகின்றாய் !
ஒரு நாளேனும் கவலை இல்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே ! " 

ஆக,பட்டுக்கோட்டையார் மறைந்த பிறகு அவரை நினைத்து, சந்திரபாபுவின் தூண்டுதலால் கவிஞர் இந்த பாடலை எழுதினார்! இதுதான் இந்த பாடலின் பிண்ணனி !

இந்த பாடல் குறித்த ஒரு சுவாரசியமான சம்பவம்

1965 - ம் வருடம் இந்தியா - பாகிஸ்தான் யுத்தம் வந்தபோது, எல்லையில் வீரர்களை மகிழ்விக்க நம் தமித் திரை உலகம் போன போது , திரும்பி வரும் வழியில் தமிழகத்துடன் நெருங்கிய தொடர்புடைய குடியரசுத் தலைவராக அப்போதிருந்த டாக்டர் .எஸ் . ராதாகிருஷ்ணன் தமிழ் திரை உலகத்தினரை குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றனர் . குடியரசுத்தலைவர் அவர்களை வரவேற்று " ராஜ மரியாதையோடு " விருந்து கொடுத்து உபசரித்தார் !

சிவாஜி கணேசன் , ஜெமினி கணேசன் , சாவித்திரி, தேவிகா , பத்மினி, ஜெயலலிதா, பி.பி. ஸ்ரீநிவாஸ், கண்ணாதாசன் , மெல்லிசை மன்னர் , பி. சுசீலா, ஏ.எல். ஸ்ரீனிவாசன், இவர்களுடன்... சந்திரபாபு ஆகியோர் விருந்துக்கு சென்றனர்.

விருந்து முடிந்தவுடன் , ஒரு பெரிய கூடத்தில் அனைவரும் அமர்ந்து குடியரசுத் தலைவருடன் உரையாடினர்.
 சிறிது நேரம் கழித்து...

குடியரசுத் தலைவர் : "யாராவது பாடுங்களேன்..?"

மெல்லிசை மன்னர்: ( தயக்கத்துடன்.....) "ஆர்மோனியப் பெட்டி இல்லாமல் எப்படி..?"

குடியரசுத்தலைவர் : "அவ்வளவுதானே ! இதோ ஆர்மோனியப் பெட்டியை கொணரச் சொல்கிறேன்!"

பத்தே நிமிடங்களில் அந்த மாபெரும் மாளிகையில் இருந்து எங்கிருந்தோ ஓர் ஆர்மோனியப் பெட்டி மெல்லிசை மன்னர் முன்பு வைக்கப் பட்டது !

முதலில் பி.பி.எஸ் பாடினர்!
"காலங்களில் அவள் வசந்தம்..!"

குடியரசுத்தலைவர் பாடலை மிகவும் ரசித்தார் !


பின்பு சந்திரபாபு பாட ஆரம்பித்தார் !

"பிறக்கும் போது அழுகின்றாய்..!
இறக்கும் போது அழுகின்றாய்..!"


அந்த பாடலை தன மெய் மறந்து கேட்ட டாக்டர் .எஸ் . ராதாகிருஷ்ணன் "அடடா..! என்ன அர்த்தமான பாடல் ! பிரமாதம்..!" என்று மனம் திறந்து பாராட்ட, இதனைக் கேட்ட சந்திரபாபுவுக்கு குஷி தாங்கவில்லை!

தனது இருக்கையில் இருந்து துள்ளிக் குதித்து, வேகமாகச் சென்று குடியரசுத்தலைவரின் மடியில் அமர்ந்து அவர் தோளில் கையைப் போட்டு , அவர் தாடையை பிடித்து 
"கண்ணா..! ரசிகன்டா நீ..!" என்று உணர்ச்சி வசப்பட்டு சொல்லிவிட்டார் !

குடியரசுத்தலைவர் என்றும் பாராமல் சந்திரபாபு செய்த 
செய்கை சிவாஜிக்கும், ஜெமினிக்கும் ஆத்திரத்தை உண்டாக்க, பாட்டை நிறுத்தச் சொல்லி மெல்லிசை மன்னரை அவர்கள் முறைக்க...

ராதாகிருஷ்ணன் அவர்களோ... பதிலுக்கு அவர் சந்திரபாபுவின் தாடையை பிடித்து மகிழ... ஒரே "ஜிலு.. ஜிலு..." என்று அந்த சூழ்நிலை அமைந்தது !


தகவல் உதவி: திரு. எம்கேஆர். சாந்தாராம்

இப்பாடலின் திரை வடிவம்


pirakkum pothum alukinrai
Uploaded by danceupanddown. - Watch original web videos.




Saturday, 27 November 2010

சமரசம் உலாவும் இடமே..! - பழைய திரைப்படப் பாடல்


''சமரசம் உலாவும் இடமே... நம் வாழ்வில் காணா... சமரசம் உலாவும் இடமே...'' என்ற பாடலை என் விருப்பப் பாடலாக இன்று பதிவிலிடுகிறேன்.

28.09.1956-அன்று, கல்பனா பிக்சர்ஸ் தயாரிப்பில், திரு. ஆர்.ஆர், சந்திரன் இயக்கதில் வெளியான திரைப்படம்  ரம்பையின் காதல்.

இப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் அமரகாவியப் பாடலாக இன்று மட்டுமல்ல... என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும். எல்லோருடைய மரணத்திற்குப் பிறகு இருக்கும், வசிக்கும், உறங்கும் இடம் எதுவெனில் அது சுடுகாடுதான்.

இங்கு ஆண்டி ஆனாலும் சரி, அரசன் ஆனாலும் சரி... மேலோர் ஆனாலும் சரி, கீழோர் ஆனாலும் சரி... எல்லோரும் இங்கு சமம் என்பதை அமர கவிஞர் திரு. மருதகாசி தனது மந்திர வரிகளில் கோடிட்டுக் காட்டியிருப்பார்...

இந்த வரிகளுக்கு இசையரசர் டி.ஆர். பாப்பா இசையமைத்திருக்க... வெண்கலக் குரலோன் திரு சீர்காழி கோவிந்தராஜன் குரல் கொடுத்திருப்பார்... கேட்டுப் பாருங்கள் இப்பாடலை... நாம் பிறந்து என்ன சாதித்திருக்கிறோம்... இறப்பின் பின் எங்கு சாந்தமாவோம் என்று இப்பாடல் நன்கு உணர்த்தும்...

உங்களுக்குப் பிடித்திருப்பின் இப்பாடலை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்... உங்களுக்குப் பிடித்த பாடலை என்னிடம் கேளுங்கள் இயன்றவரை தேடி எடுத்துத் தருகிறேன்


சமரசம் உலாவும் இடமே..! | Musicians Available

இப்பாடலின் திரை வடிவம் இங்கே...



நன்றி: யூ டியூப்



Friday, 25 June 2010

திருடாதே பாப்பா திருடாதே..! - பழைய திரைப்படப் பாடல்..!


சமூகத்திற்குண்டான நல்ல கருத்துக்களை தன் படத்தில் இடம்பெற வைப்பது எம்.ஜி.ஆரின் பாணி. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் நடிப்பில் 1961-ல் வெளிவந்த 'திருடாதே' என்ற படத்தில் இடம் பெற்ற ''திருடாதே... பாப்பா திருடாதே...'' என்ற பாடல்தான் இன்று நான் பதிவிலிடுவது.

மலைக்கள்ளன், நாடோடி மன்னன் படங்களின் வெற்றிக் கூட்டணியான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்,எம்.ஜி.ஆர்,எஸ். எம். சுப்பையா நாயுடு கூட்டணிதான் இப்படத்திலும் இடம்பெற்றது.

இப்படத்தின் பாடல்களை எல்லாம் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார். இப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ். எம். சுப்பையா நாயுடு அவர்கள். பாடியவர் நமது டி.எம்.எஸ். இப்படத்தை இயக்கியவர். ப. நீலகண்டன். இப்படத்தில் ஒரு சிறப்பு உண்டு. கவிஞர் கண்ணதாசன் இப்படத்திற்கு கதை வசனம் எழுதியிருக்கிறார். பாடல் ஏதும் எழுதவில்லை என்று நினைக்கிறேன்...

பட்டுக் கோட்டையாரின் இப்பாடல் வரிகள் அத்துனையும் வைரம்...

''திருடாதே பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்து விடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே..!''

''இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா
பதுக்குற வேலையும் இருக்காது ..!''

''உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது..!''


எனக்குப் பிடித்த இப்பாடலை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..! மேலும், உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..! இயன்றவரை நான் தருகிறேன்..!


திருடாதே பாப்பா திருடாதே..! | Music Codes

-------

(1959 - ஆம் ஆண்டு சீர்காழியில் நடைபெற்ற நாடகத்தின்போது எம்.ஜி.ஆரின் கால் எலும்பு முறிந்து! இனி அவ்வளவுதான்! எம்.ஜி.ஆரால் நடக்க முடியாது! நடிக்க முடியாது என்றார்கள். தனது மன உறுதியால், கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, ‘திருடாதே’ திரைப்படத்தில் நடித்துப் படவுலகில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தினார்.

திருடாதே’ எம்.ஜி.ஆர். சரோஜாதேவியோடு இணைந்து நடித்த சமூகப்படம். ஏ.எல். சீனிவாசன் தயாரித்த இப்படத்தின் வசனத்தை கண்ணதாசன் எழுத, ப. நீலகண்டன் இயக்கினார். ராஜாராணி கதைகளிலேயே நடித்து வந்த எம்.ஜி.ஆருக்கு இப்படத்தின் வெற்றி பெரும் திருப்புமுனையாகவே 
அமைந்தது எனலாம்)

 இப்பாடலின் திரைவடிவம்




Tuesday, 15 June 2010

தூங்காதே தம்பி தூங்காதே..! - பழைய திரைப்படப் பாடல்..!


நாடோடி மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்தான் இந்த 'தூங்காதே தம்பி தூங்காதே..!' பாடல்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் சொந்த தயாரிப்பில், அவரின் இயக்கத்தில், அவர் இரட்டை வேடமேற்று நடித்த படம்தான் இந்த  நாடோடி மன்னன்.

1958- தீபாவளி அன்று வெளியான, இப்படத்தின் பாடல்களை எல்லாம் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார். இப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ். எம். சுப்பையா நாயுடு அவர்கள். பாடியவர் நமது டி.எம்.எஸ்.

(S.M. சுப்பையா நாயுடு. தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்.  மலைக்கள்ளன் படத்திற்கு அவர் அமைத்திருந்த இசை, அந்தப் படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், எம்.ஜி.ஆர்., S.M. சுப்பையா நாயுடு என்ற வெற்றிக் கூட்டணி மீண்டும் நாடோடி மன்னன் படத்தில் இணைந்தது.)

எம்.ஜி.ஆர் தனது அனைத்து சொத்துக்களையும் அடமானம் வைத்தும், சிலவற்றை விற்றும் இப்படத்தை எடுத்து முடித்தார். 'இப்படம் வெற்றி பெற்றால் நான் மன்னனாவேன்... இல்லையெனில் நாடோடி ஆவேன்' என இப்படத்தை வெளியிடும் போது எம்.ஜி.ஆரே சொன்னார். படம் வெளியாகி வெள்ளி விழா கண்டது மட்டுமின்றி பல சாதனைகளையும் படைத்தது.

இப்பாடலின் வரிகள் அத்துனையும் வைரம்... 

''நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழித்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்..!''


எனக்குப் பிடித்த இப்பாடலை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் கேட்டு  மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து  கொள்ளுங்கள்..! மேலும்,  உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..! இயன்றவரை நான் தருகிறேன்..!
 
தூங்காதே தம்பி தூங்காதே..! | Musicians Available


----------

நாடோடி மன்னன் படத்தின் சாதனைகள்

நாடோடி மன்னன் வெளியான தேதி : 22.8.1958

புரட்சி நடிகர் முதன் முதலில் இரட்டை வேடம் ஏற்று நடித்து வெளிவந்த படைப்பு வெள்ளி விழா காவியம்.

1958-ம் ஆண்டு தீபாவளி அன்று சிங்கப்பூர் நகரங்களில் திரையிடப்பட்டு மாபெரும் சாதனை படைத்த படம் நாடோடி மன்னன். தமிழ் படங்களில் அன்றைய சிங்கப்பூர் மிகப்பெரிய திரையரங்கில் அதிக வசூல் சாதனை செய்த காவியம்.

1958 – ல் 50 திரையரங்கில் 50 நாள் ஓடி அதிக வசூல் பெற்று(1 கோடியே 10 லட்சம் ) சாதனைபுரிந்த காவியம் (50 திரையரங்கு என்பது இரண்டாம் வெளியீட்டும் சேர்த்து).

“முதன் முதலில் தலைநகர் சென்னையில் மூன்று அரங்கில் 100′ காட்சி மேல் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் ஆன காவியம்.

சேலம் சித்தேஸ்வரா அரங்கில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம் இது. புரட்சி நடிகர் கலையுலகில் நடிக்கும் வரை சேலம் நகரில் வெள்ளி விழா கண்ட ஒரே காவியமும் நாடோடி மன்னன் ஒன்றே !

“திருவண்ணமலையில் 100 நாள் கண்ட படமும் ! (இரண்டாம் வெளியீட்டில் முதல் முதலில் 100நாள் கண்ட முதல் காவியமும் இதுவே ! அரங்கு கிருஷ்ணா 113நாள்.

சென்னை கிருஷ்ணா அரங்கில் அதிக நாள் ஓடிய ஒரே காவியம் ( 3காட்சியில்) 161 நாள்.

இலங்கை மாநகரில் 6 அரங்குகளில் 100 நாள் கண்ட ஒரே காவியம் இது ஒன்றே !

“சிறந்த இயக்குநர் விருது “சினிமாகதிர் ” புரட்சி நடிகருக்கு வழங்கியது.

“லண்டன் ‘ தமிழ் சங்கத்தில் கலந்து கொண்ட முதல் தமிழ் காவியம்.

“சிறந்த இயக்குநர் விருது சிங்கப்பூர் பத்திரிக்கையும் மக்கள் திலகத்திற்கு வழங்கியது.

மும்பை, கல்கத்தா ஆகிய வட இந்தியாவிலும் முதன் முதலில் 50 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த காவியம் நாடோடி மன்னன்.

1958-ல் சிறந்த படமாக தேர்ந்து எடுக்கப்பட்ட காவியம்.

“லண்டன்” மாநகர் திரையரங்கு ஒன்றில் சுமார் 8 வாரம் ஒடிய ஒரே தமிழ் காவியம் இது ஒன்றே !

ஆந்திர மாநிலமான “சித்தூரில் ” 100 நாள் கண்ட ஒரே தமிழ் காவியம் இது ஒன்றே !

முதன் முதலில் ஒரு படத்தின் வெற்றி விழாவை பொது மக்கள் பார்வையில் ( தமிழகம் முழுவதும்) கொண்டாடிய முதல் காவியம் ! நாடோடி மன்னனே !

“இவர் காவியத்திற்காக புரட்சி நடிகருக்கு 110 “சவரன்” தங்க வாள் பேரறிஞர் அண்ணா அவர்களால் வழங்கப்பட்டு, பின் புரட்சி நடிகர் அந்த தங்க வாளை…. சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு இலவசமாக வழங்கினார்.

சீர்காழியில் “இன்பக்கனவு “நாடகத்தில் புரட்சி நடிகர் நடித்த போது, கால் உடைந்து பல மாதங்கள் ஓய்வு எடுக்க டாக்டர்கள் சொன்னதால் 31.12.1959 அன்று தான் புரட்சி நடிகர் நடித்த ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ படம் வெளிவந்தது. ஆகையால் 1959-ம் ஆண்டும் ‘நாடோடி மன்னன்’ தமிழகம் முழுவதும் வசூலை வாரி தந்தது.

“ஒரு முன்னணி (கதாநாயகன்) நடிகராக யிருந்து முதன் முதலில் தயாரித்து இயக்கிய வெற்றி படமாகக் தந்தவர் புரட்சி நடிகரே.

“நடிகை அபிநய சரஸ்வதி B.சரோஜாதேவி அறிமுகமான முதல் படம். B. சரோஜாதேவி பின் நாளில் 26 படங்களில் மக்கள் திலகத்துடன் கதாநாயகியாக நடித்தார்.

“பாதி கறுப்பு வெள்ளை, பாதி கலர் படமாக முதல் முதலில் வெளிவந்த படம்.

“அதிக நேரம் (நான்கு மணி நேரம்) ஓடிய படம் இன்று வரை நாடோடி மன்னன் மட்டுமே.

“தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் பாடல் டைட்டில் சாங்ஸ், (செந்தமிழே வணக்கம்) உழைப்பை உணர்த்தும் பாடல் (உழைப்பதிலா), சோம்பேறி தனத்தை சாடும் பாடல்(தூங்காதே தம்பி) ஆக மூன்று கருத்துகள் உணர்த்தும் பாடல்கள் அமைந்தஒரே காவியம்.

“அரண்மனை சிறைசாலையில் கீழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்கு ஒரு பெரிய குழாயின் மூலமாக இரு புரட்சிகாரர்கள் (புரட்சி நடிகரும் -பானுமதியும்) தொடர்பு கொள்வது எப்படி என்பது பற்றி புதுமையான முறையில் அன்றைக்கு கேமராவில் எடுத்துக் காட்டிய காவியம் நாடோடி மன்னன்.

“ஒரே நடிகர் இரு வேடங்களில் நடித்து படங்களின் இடம் பெறும் ஒரே காட்சியில் இருவரும் கை கொடுப்பது முகத்தை தொட்டு பேசுவதும் போன்ற புதுமையான காட்சிகள் இடம் பெற்ற முதல் தமிழ் காவியம்.

“10- க்கும் மேற்பட்ட பாடல்கள் (ஹிட் சாங்ஸ்) அனைத்தும் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒலித்து கொண்டிருக்கும் சாதனை காவியம் நாடோடி மன்னன்.

“கண்ணாடி மாளிகை சண்டை காட்சியில் கண்ணாடி முழுவதும் தூள் தூள்ளாக உடைந்து சிதறுவது போல் ஆங்கில படத்துக்கு இணையாக (அதிக செலவு) எடுத்த காவியம்.

“அரண்மனையில் மன்னர்கள் ரகசிய வழியில் (சுரங்கப் பாதை) செல்வது எப்படி என்பதை பிரமிக்க கூடிய அளவுக்கு காண்பித்த காவியம்.

“கதாநாயகி (பானுமதி) இறந்துவிட்ட செய்தி படத்தில் காண்பிக்கும் பாணி ; ஒரு பணி பெண் பால் பாத்திரத்தை கொண்டு வரும் போது, கதாநாயகன் எதிரே ஓடி வந்ததால் அந்த பால் கீழே கொட்டிவிடுகிறது. மேலே ஒரு வரைபடத்தில் அம்பு பட்ட மான் இறந்து கிடப்பது போல் காண்பிப்பார்கள். புதுமையான முறையில் காட்சியை உருவாக்கும் முறையில் முழு வெற்றியை தந்த காவியம். இன்றைக்கும் இந்த காட்சி திரையரங்கில் கைதட்டல் பெறும்.

தமிழகத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் வெளிவரும் ‘இந்தியன் மூவி நீயூஸ்’ என்ற இதழ் முதல் முதலில் நாடோடி மன்னனுக்கு சிறப்பு மலர் வெளியிட்டது.

தமிழகத்தில் நாடோடி மன்னன் காவியத்திற்கு 10 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் சிறப்பு மலர் வெளியிட்டன.

தமிழகத்தில் வெளிவந்த அனைத்து பத்திரிகைகளில் நாடோடி மன்னன் காவியத்திற்கு அதிக விமர்சனம் (பாராட்டு) கிடைத்தது.

“4 மணி நேரம் ஓடுகின்ற திரைப்படத்தில் சிக்கலே இல்லாத கதை அமைப்பு கொண்டது. ஒரு பாமரனுக்கும் புரிகின்ற அளவுக்கு எளிமையான முறையில் வலுவான கருத்துகளோடு அமைத்து திறமையாக இயற்றி வெற்றி வாகை சூடிய காவியம்.

“வசனத்தில் புதுமை புரட்சி கருத்துகள், சிறை அனுபவங்கள், ராஜ தந்திரங்கள், நகைச்சுவை, காதல்,அன்பு,சகோதரி, சகோதரன் போன்ற பல விதமான பாத்திரங்களுக்கு சிறப்பாக வசனங்கள் அமைந்த காவியம் நாடோடி மன்னன்.

முதலில் “அரசியல் கட்சி கொடியை ஆரவாரத்துடன் பறக்க விட்டு வெளிவந்த காவியம் இது !

தகவல் உதவி: http://www.lakshmansruthi.com/cineprofiles/nadodi_mannan.asp