ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label Tamil folk songs. Show all posts
Showing posts with label Tamil folk songs. Show all posts

Tuesday, 18 March 2014

ஏ... ஒத்தையடிப் பாதையில..! - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் கிராமிய பாடல்


கிராமிய பாடலைக் கேட்டு ரொம்ப நாளாச்சு... அதை பதிவிலிட்டும் ரொம்ப நாளாச்சு இல்லையா... இன்று அந்த குறையை போக்கிடலாம். எனக்குப் பிடித்த இந்த பாடல் நிச்சயம் உங்களையும் கவரும்.

கிராமியப் பாடகர்களான விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினர் பல்வேறு பாடல்களைப் பாடியிருக்கின்றனர். அதில் இன்று ஒரு பாடலைப் பதிவிலிடுகிறேன்.

'ஏ... ஒத்தையடிப் பாதையில... அத்தை மக போகையில...' என்று துவங்கும் இந்தப்பாடல் எசப்பாட்டு வகையினைச் சேர்ந்தது. அத்தை மகள் ஒத்தையடிப் பாதையில் போவதை பார்க்கும் முறை மாமன், அவளைப் பற்றி ஒரு பாடலை எடுத்து விடுகிறான். அதற்கு பதிலாக அத்தை மகளும் எசப்பாட்டை எடுத்து விடுகிறாள்.

 எனக்குப் பிடித்த இந்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள். பிடித்திருந்தால் இலவசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளுங்கள். 





*****************************************

இப்பாடலில் நான் கண்ட சுவாரசியத் தகவல்கள்



@ கோரஸ் குரலில் வரும் வாக்கியங்கள் அந்தகால காதலை கண்முன் நிறுத்துவது போல் இருக்கும். 'ஆசை கெடக்குது ஆசை கெடக்குது அஞ்சறைப் பெட்டிக்குள்ள... சீவன் கெடக்குது சீவன் கெடக்குது செந்தூரப் பொட்டுக்குள்ள...' என்று கோரஸ் பாடுவார்கள்.

@ இதில் முதல் வரி, அந்த காலப் பெண்களின் காதலை நயமாக எடுத்துச் சொல்லும். நாள் முழுக்க ஏர்பிடித்து, உயவு செய்து,  வெள்ளாதை செய்து, வீட்டில் சேகரித்து வைக்கும் தானியங்களை வீட்டிலுள்ள பெண்கள் எடுத்து சமைப்பர். தன் வீட்டு நிலத்தில் விளைந்த தானியங்கள் என்றாலே தனிப்பெருமைதானே. அப்படிப்பட்ட தானியங்களில் சமையல் பொருட்களும் அடக்கம். அது அஞ்சறைப் பெட்டிக்குள் மூடி அடங்கியிருக்கும். அதுபோல் தனது காதலை, அப்பெண்கள் அஞ்சறைப் பெட்டிக்குள் அடக்கி வைத்திருப்பது போல் அடக்கி வைத்திருந்தனர் என பொருள் கொள்ளலாம்.

@ இரண்டாவது வரி ஆண்களின் காதலைச் சொல்வது. ஆண்மகன் ஒரு பெண்ணின் நெற்றியில் பொட்டு வைத்தால், அவள்தான் தனது மனைவி என்பதை அது அடையாளப்படுத்திவிடும். அதைத்தான் இங்கே மிக நாசூக்காக, ஆணினுடைய சீவன் (உயிர் மூச்சு) செந்தூரப் பொட்டுக்குள்ளே என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

@ இப்பாடலில் எதிரொலிப்பு முறை (எக்கோ) பயன்படுத்தியிருக்கும் அழகு, இப்பாடலுக்கு இன்னும் அழகூட்டியிருக்கிறது எனலாம். 

@ ஆண் பாடகரும், பெண் பாடகியான விஜயலட்சுமி அம்மாவின் குரலும் நம்மை நிச்சயமாக வசீகரிக்கும்

@ நையாண்டி மேளமும், உருமி சத்தமும் இப்பாடல் முழுக்க உடன்வந்து, நம்மை உற்சாகப்படுத்தும். இந்த இசையால் துள்ளாட்டம் போடாமல் இருக்கமுடியாது.

@ இதில் வரும் ட்ரம்பெட் இசையை (அது என்ன இசைக்கருவி என்று எனக்கு சரியான புரிதல் இல்லை. அதனால், என் அறிவுக்கு எட்டியவரை, இதை ட்ரம்பெட் எனக் குறிப்பிட்டிருக்கிறேன். சரியான பெயரை கூறினால் திருத்திக் கொள்வேன்), இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ஈசன் படத்தில் வரும் பாடலான 'ஜில்லா விட்டு ஜில்லா வந்த...' என்ற பாடலில் அப்படியே பயன்படுத்தி இருக்கிறார் என்று தோன்றுகிறது. இப்பாடலை கேட்டுவிட்டு, இது உண்மையா இல்லையா என்று பின்னூட்டத்தில் தெரிவியுங்களேன்.

@ கார்த்தி நடித்த 'பருத்திவீரன்' படத்தில் இடம்பெறும் ஊரோரம் புளியமரம் என்ற பாடலில் வரும் 'ஆளில்லாத காட்டுக்குள்ள பயலே... ரவுசு பண்ணும் சின்னத்தம்பி' என்று பாடும் குரல் மதுரை எஸ். சரோஜா அவர்களின் குரல் (தகவல் சரிதானா). அவர் இந்த பாடலில் கோரஸின் அடிகளை முதலிலேயே பாடுகிறார். குரல் அவருடையதுதான் எனக் கருதுகிறேன்.

@ இப்பாடலில் ராமநாதபுரம், பட்டுக்கோட்டை பகுதி வட்டார வழக்குச் சொல்களான 'அம்மாளு..', 'அய்யாவு...' என்ற பதங்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்பகுதியைச் சேர்ந்த மக்களின் பாடலாக இருக்கலாம். (இதுவும் எனக்கு தெளிவாகத் தெரியவில்லை)



நன்றி: விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினர்




Tuesday, 14 June 2011

செவலக்காளை ரெண்டு பூட்டி..! - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்!




"செவலக்காளை ரெண்டு பூட்டி... மாமன் சேத்துமேட்டை உழுது வாரான்..!" என்ற கிராமியப் பாடலை இன்று என் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன். 


கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் மெல்லிசை கலந்த துள்ளலிசைப் பாடல்...


அக்காலத்தில் வயல்வெளிகளில் உழவு உழும் போதும், நாத்து நடும் போதும் களைப்பு தெரியாமல் இருக்க, தெம்மாங்கு பாடல்களை பாடி களைப்பு தெரியாமல் வேலையை முடிப்பார்கள். கூட இருக்கும் பெண்கள் குலவை போட்டு பாடுபவரை உற்சாகப் படுத்துவார்கள். அதை கேட்கும் சுகமே தனி சுகம்தான்.

இதுதான் இப்பாடலின் பின்னணி. எனது மாமன் உழவு செய்கிறான், அதற்கு ஏற்றாற் போல் நாற்று நடவேண்டும், சம்பா நெல் நடவேண்டும் என வேண்டுகோள் வைக்கிறாள் தலைவி. தலைவியின் கூற்றை கூட இருக்கும் பெண்கள் குலவை இட்டு ஆமோதிக்கிறார்கள். தலைவனோ மழை பெய்ய வேண்டும், நாடு செழிக்க வேண்டும் அதற்கும் குலவையிடுங்கள் என்கிறான். அதற்கும் குலவையிடுகிறார்கள்


நையாண்டி மேளம், உருமி, குலவை இசை, புல்லாங்குழல் என கிராமத்திற்கே உரிய வாசனையை இப்பாடலில் புகுத்தியிருப்பார் புஷ்பவனம் குப்புசாமி. கேட்க கேட்க பரவசப்படுத்தும் பாடல் இது....


எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்க... பிடிச்சிருந்தா இலவசமா பதிவிறக்கம் பண்ணிக்கோங்க...உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க... ஓட்டு போட்டீங்கன்னா.. நிறைய பேருக்கு நமது கிராமியப் பாடல்கள் சென்றடையும்...



செவலக்காளை..! | Upload Music

(நன்றி: திரு. கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினர்)




Tuesday, 26 April 2011

என்னடி முனியம்மா..! - டி.கே. எஸ். நடராஜனின் கிராமியப் பாடல்!


'அட என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி... யாரு வச்ச மையி... இது நான் வச்ச மையி...' என்ற உண்மையான கிராமியப் பாடலை இன்று என் விருப்ப பாடலாக பதிவிலிடுகிறேன்.

என்னுடைய சிறுவயதில் கேட்ட பாடல். ஊர் திருவிழாவின் போது இப்பாடலை அடிக்கடி ஒலிபரப்புவார்கள். கேட்கவே இனிமையாக இருக்கும். டி.கே.எஸ். நடராஜன் என்ற கிராமியப் பாடகர் பாடிய பாடலிது. இவர் வெளியிட்ட நாட்டுப்புற தெம்மாங்கு என்ற கிராமிய இசைத் தொகுப்பில் இப்பாடல் இடம்பெற்றிருக்கிறது.

இப்பாடல் ஏதோ ஒரு சினிமாவில் இடம் பெற்ற பாடலோ என்று என்னுடைய சிறுவயதில் நினைத்துக் கொள்வேன். அப்போதெல்லாம் யாரேனும் கண்ணில் அதிகமாக மை வைத்துக் கொண்டு தெருவில் வந்தால் (என் வயது பெண் பிள்ளைகளைத்தான்) இந்தப் பாடலைத்தான் பாடி கிண்டல் பண்ணுவோம்.

அருமையான கிராமிய இசையும், டி.கே.எஸ். நடராஜன் அவர்களின் வெண்மணிக் குரலும் நம்மை மெய்மறக்கச் செய்து விடும். தன் கிராமத்து கட்டழகியை அவர் வர்ணிக்கும் விதமே தனி அழகு.

எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள். பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்.


என்னடி முனியம்மா..! | Musicians Available

நன்றி: டி.கே.எஸ். நடராஜன் குழுவினர்

சுவாரசியத் தகவல்கள்


@ இப்பிரபலமான கிராமியப் பாடலை, அர்ஜுன் நடித்து வெளிவந்த 'வாத்தியார்' படத்தில் ரீமிக்ஸ் செய்திருப்பார்கள். அதில் டிகேஎஸ் நடராஜனும் இப்பாடலுக்கு பாடி, ஆடி நடித்திருப்பார்.


@ கிராமியப் பாடல்களை பாடினாலும், சினிமாவிலும் டிகேஎஸ் நடராஜன் நடித்துள்ளார். துணை கதாபாத்திரங்களாக நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.




Saturday, 16 April 2011

எல்லாம் கெடக்கட்டும் வாங்க..! - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் கிராமியப் பாடல்



விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் 'எல்லாம் கெடக்கடும் வாங்க... ரெண்டு இளசு வெத்தல தாங்க..!' என்ற அட்டகாசமான துள்ளலிசை கலந்த கிராமியப் பாடலை இன்று பதிவிலிடுகிறேன்.

விஜயலட்சுமி அம்மாவின் கணீர்க்குரலில் வரிகள் வலை விரிக்க, கோரஸ் பாடியிருக்கும் குழுவினரும் அதற்கு ஒத்திசைக்க, அதன் பின்னர் வரும் உருமி, நாதஸ்வர இசை, நையாண்டி மேள இசை
 எல்லாம் நம்மை எளிதில் வளைத்து விடுகிறது. குடுகுடுப்பை போன்ற ஒரு இசைக்கருவியும் நம்மை உசுப்பேற்றுகிறது. 

கிராமத்து மக்களுக்கு வெறும் வாயை மெல்லப் பிடிக்காது, வெத்திலை போட்டு மெல்லவது அவர்களுக்கு மெத்தப் பிடிக்கும். அதனைப் பயன்படுத்தி விவசாயம் சார்ந்து பாடலை பின்னியிருப்பார்.. அவரது குரலாலும், அவரது குழுவினரின் குதுகல இசையாலும் நம்மை பின்னலிட வைக்கிறார்கள்.



அட்டகாசமான துள்ளலிசைப் பாடலைக் கொடுத்தமைக்கு திருமதி. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். எனக்குப் பிடித்த இந்த கிராமியப் பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


எல்லாம் கெடக்கட்டும் வாங்க..! | Upload Music

நன்றி: விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் & குழுவினர்




Monday, 28 March 2011

வந்தா வராண்டி..! மதுரை சுண்ணாம்புதாண்டி..! - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் கிராமியப் பாடல்


விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் 'சந்திரரே சூரியரே... சாமியே என் துரையே... என்ன சொல்லி கூப்பிடட்டும்...... வந்தா வராண்டி... மதுரை சுண்ணாம்புதாண்டி..!' என்ற அட்டகாசமான துள்ளலிசை கலந்த கிராமியப் பாடலை இன்று பதிவிலிடுகிறேன்.

வந்தா வராண்டி.. மனுசன் போனா போறாண்டி... என்ற சந்தத்தோடு பாடலின் வரிகள் ஒலிக்க, உறுமி மேளமும் நையாண்டி மேளமும் நையப்புடைக்க, சலங்கை ஒலி நம்மை ஆட வைக்க, நாதஸ்வரம் நம்மை தலையசைக்க வைக்கிறது...

அட பாட்டை கேட்டுப் பாருங்க... நீங்க ஆடலன்னா ஏன்னு கேளுங்க... நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடலிது. 'எலுமிச்சம் பழம் சிவப்பு.. அட இஞ்சிமுறப்பா ஒரப்பு..' என்ற பிரபல வரிகள் இந்த பாடலில்தான் இருக்கிறது.

அந்தக் காலத்தில் எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில் வெளியான சந்திரலேகா படத்தில் கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் பாடாலான 'ஆத்தோரம் கொடிக்காலாம்.. அரும்பரும்பா வெத்திலையாம்..' என்ற பாடலின் நான்கு வரிகளை இப்பாடலில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அட்டகாசமான துள்ளலிசைப் பாடலைக் கொடுத்தமைக்கு திருமதி. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எனக்குப் பிடித்த இந்த கிராமியப் பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


சந்திரரே சூரியரே..! | Upload Music

நன்றி: விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் & குழுவினர்




Saturday, 26 March 2011

விரட்டி விரட்டி பிடிக்கும் போது..! - பரவை முனியம்மாவின் கிராமியப் பாடல்


பறவை முனியம்மாவின் கணிர் குரலில் 'வெரட்டிவெரட்டி பிடிக்கும் போது என்ன சொல்லுமாம் கோழிக் குஞ்சு' என்ற கிராமியப் பாடலை இன்றைய நேயர் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்.

கோழியையும், கோழிக் குஞ்சியையும் வைத்து பரவை முனியம்மா அவர்கள் இப்பாடலைப் பாடியிருக்கும் விதமும், இதற்கான நமது கிராமத்து இசைகளும்.. அடடா நம்மை ஆட வைக்காமல் விடாது என்றுதான் சொல்ல வேண்டும்.

நையாண்டி மேளமும், நாதஸ்வரமும் நம்மை துள்ளாட்டம் போட வைக்கும். பரவை முனியம்மாவுடன் பாடும் கோரஸ் குரல்களும் சளைக்கவில்லை. இவர் பாடி முடித்ததும், அதற்கு பின்னிசையாக நாதஸ்வரமும், மேளமும் தாளம் தப்பாமல் பின்னியெடுக்கிறது.

இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாகக் கேட்ட அன்பு நண்பர் திரு. ரமேஷ் அவர்களுக்கு எனது நன்றி. அவருக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள். இப்பாடல் உங்களுக்குப் பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்.


விரட்டி விரட்டி பிடிக்கும் போது..! | Upload Music

நன்றி: பரவை முனியம்மா & குழுவினர்

-------------------------------------------------------

Ramesh said...
indha websitil erendu padalgalai keten migunda maghilchi. enudaya laptopil tamil version illai adalal ennai manikkavum. en virupa padalaga PARAVAI MUNIYAMMA padiya padal 'VERATI VERATI PUDIKUMBODHU ENA SOLUMMA KOZHIKUNJU' endra padalai ketka migunda assai mudinthal tharavum.

Ramesh
17 December 2010 21:37




Monday, 28 February 2011

ஏலக்காயாம்... ஏலேரீசாம்... - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்


'ஏலக்காயாம்.. ஏலேரீசாம்.. நல்ல ஈரெலைக் கடுதாசியாம்...' என்ற பாடலை என் விருப்ப பாடலாக இன்று பதிவிலிடுகிறேன்.

'கலைமாமணி' புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் அற்புதமான மெட்டமைப்பில், அவரது தெள்ளிய கிராமத்துக் குரலில் இப்பாடல் ஒலிக்கிறது... இவரது குழுவினரின் கோரஸும், ஹம்மிங்கும் நம்மை அழகாக ரசிக்க வைக்கும்.

இப்பாடலில் தமிழிசையினை மிகவும் அற்புதமாகப் பயன்படுத்தி இருக்கிறார் குப்புசாமி. புல்லாங்குழல் இசை தனி ஆவர்த்தனம் செய்கிறது.

படிக்காமல் போன கிராத்து விவசாயி ஒருவர், இளம் பிராயத்தில் படிக்காமல் விட்டுவிட்டால் என்னென்ன சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை மிக அழகாக இப்பாடலில் உணர்த்துகிறார் புஷ்பவனம்.

மெல்லிசை கலந்த கிராமியப் பாடலை கேட்க ஆசையெனில் இப்பாடலைக் கேளுங்க. தங்களுக்கு பிடித்திருப்பின் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...


ஏலக்காயாம் ஏலேரீசாம்..! | Musicians Available

(நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர்)




Thursday, 17 February 2011

கூட்டு வண்டி காளை போல..! - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்..!




கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமியின் நெஞ்சை உருக்கும் காதல் சோக கீதம்தான் இந்த 'கூட்டு வண்டி காளை போல..!' எனும் பாடல்... 

2004 முதல் புஷ்பவனத்தாரின் பாடல் சிடியை வைத்துக் கொண்டிருக்கிறேன்... இத்தனை வருடங்களும் இந்த முத்தான பாடல் என் கண்ணில் படவில்லை, காதில் கேட்கவில்லை... அண்மையில் ஒவ்வொரு பாடலாக கேட்டபோதுதான் இப்பாடலைக் கண்டுகொண்டேன். அடடா இத்தனை நாள் இப்பாடலை கேட்காமல் போனோமே என்று என்னை நானே நொந்து கொண்டேன்...

இப்பாடலைக் கேட்டதும் என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது... என் காதல் தோல்வியும்... இப்பாடலின் வரிகளும், இசையும் என்னை உருக்கி விட்டன என்பதே இதன் சாராம்சம்.

(காதல் தோல்வி அடைந்த ஒவ்வொரு ஆண்மகனுக்கும்,  இப்பாடல் அவனது பழைய காதல் நினைவுகளை, கண்டீப்பாக அவன் முகத்தில் விசிறியடிக்கும்...)

மனதைப் பிழியும் இசையும், காதல் சோகம் இழையோடும் புஷ்பவனத்தாரின் குரலும்...  (சங்கதி வைத்துப் பாடும் குரலைக் கேளுங்களேன்...) உங்களையும் சோகத்தில் ஆழ்த்தும்... இது ஒரு விவசாயினுடைய காதல் தோல்வி.. அதை விவசாயியின் வாகனமான மாட்டு வண்டியோடும் குளம், கொக்கு, மீன், குண்டு மல்லி போன்றவற்றோடும் இணைத்துப் பாடுகிறார்...


அவரின் சோகத்தைப் புல்லாங்குழல் இசையும், மாட்டின் கழுத்தில் இருக்கும் சலங்கை ஒலி இசையும், கஞ்சிரா இசையும் இப்பாடலில் கனத்த மனதோடு வெளிப்படுத்துகிறது..!

கேட்டுப் பாருங்க.. ஒரு கிராமத்து மனிதனுடைய காதல் தோல்வியை...!

உங்களுக்குப் பிடித்திருப்பின் இந்த முத்துப் பாடலை இலவசமாக தத்தெடுத்துக் கொள்ளலாம்.. அதாவது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..!


கோடான கோடி நன்றி: கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினர் 




Thursday, 13 January 2011

நாடு ரொம்ப கெட்டுப் போச்சு..! - பரவை முனியம்மாவின் கிராமியப் பாடல்


பரவை முனியம்மா அவர்களின் கிராமியப் பாடலை, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் திருநாள் சிறப்புப் பாடலாக இப்பாடலைப் பதிவிலிடுகிறேன்

''நாடு ரொம்ப கெட்டுப் போச்சு...
நாகரீகம் முத்திப் போச்சு..!''
'கோலம் போட்ட பெண்களெல்லாம் கவர்ச்சி காட்டுது..!
கிராப் வைத்துக் கொள்ளுது' என்று பெண்களையும்..
சின்னஞ்சிறு வயதில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் இளம் பிராயத்தினரையும், சினிமா உலகைப் பார்த்து, ஆண், பெண் தடம் மாறுவது... என அனைத்து சீர்கேடுகளையும் ஒரு பிடிபிடிக்கிறார் பரவை முனியம்மா..!

இப்பாடலில் தவில், நாதஸ்வரம், நையாண்டி மேளம் ஏன கிராமிய இசை பின்னியெடுக்கிறது. இப்பாடலின் பின்னணி இசையை பருத்தி வீரன் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள் (திருநங்கைகள் உடன் பாடும் பாடலில் வரும் நையாண்டி மேளம் மற்றும் நாதஸ்வர இசை)

பரவை முனியம்மா வெண்கலக் குரலில் இப்பாடலைக் கேட்டு மகிழுங்கள். பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


நாடு ரொம்ப கெட்டுப் போச்சு..! | Upload Music

இனிய தமிழ்ப்பாடல்கள் வலைத் தளத்தின் அன்பு நேயர்களுக்கு அடியவனின்
இனிய தமிழர் திருநாள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!




Wednesday, 17 November 2010

ஏ புள்ள ராசாத்தி..! - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்..!

'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ளலிசைப் பாடல்...

ஆரம்பத்திலிருந்தே துள்ளலிசை உங்களை மட்டுமல்ல உங்களு காதையும் ஆட வைக்கும்... நையாண்டி மேளம்.. நாதஸ்வரம், புல்லாங்குழல் என கிராமிய இசை பின்னியெடுக்கும்... அடடா... தமிழிசைன்னா... தமிழிசைதான்...

'ஏ புள்ள ராசாத்தி... என் பாட்ட கேளாத்தி... ஏரிக்கரை பக்கம் வாடி ஏலே செல்லம்மா..' என தலைவன் கேட்க பதிலிருக்கிறாள் தலைவி... எசப்பாட்டு வடிவத்தில் இப்பாடல் ஒலிக்கிறது...

எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்க... பிடிசிருந்தா இலவசமா பதிவிறக்கம் பண்ணிக்கோங்க...உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க... ஓட்டு போட்டீங்கன்னா.. நிறைய பேருக்கு நமது கிராமியப் பாடல்கள் சென்றடையும்...


ஏ புள்ள ராசாத்தி...! | Upload Music

நன்றி: திரு. புஷ்பவனம் குப்புசாமி & அனிதா குப்புசாமி



Wednesday, 4 August 2010

தாமரை தெப்பத்துல..! - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்.!

'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ளலிசைப் பாடல்...

ஆரம்பத்திலிருந்தே துள்ளலிசை உங்க காதை ஆட வைக்கும்... நையாண்டி மேளம்.. உருமி மேளம் என கிராமிய இசை பின்னியெடுக்கும்...  அடடா... தமிழிசைன்னா... தமிழிசைதான்...

தாமரை தெப்பத்துல... தலைமுழுகி போற புள்ள.. நீ குளிக்கும் தெப்பத்தில நான் குளிச்சா ஆகாதோ..? என தலைவன் கேட்க பதிலிருக்கிறாள் தலைவி... எசப்பாட்டு வடிவத்தில் இப்பாடல் ஒலிக்கிறது...

எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்க... உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க... ஓட்டு போட்டீங்கன்னா.. நிறைய பேருக்கு நமது கிராமியப் பாடல்கள் சென்றடையும்...


தாமரை தெப்பத்துல..! | Musicians Available

நன்றி: 'கலைமாமணி' புஷ்பவனம் குப்புசாமி & குழுவினர்



Monday, 19 July 2010

பட்டணந்தான் போகலாமடி பொம்பளே..! - பழைய திரைப்பாடல்

எங்கள் வீட்டு மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'பட்டணந்தான் போகலாமடி பொம்பளே..! காசு பணம் சேக்கலாமடி..!' என்ற பாடல் என் விருப்பப் பாடலாக இடம்பெறுகிறது.

இப்பாடலுக்கு தனிச்சிறப்பு ஒன்று உண்டு... அது எதுவென்றால் சீர்காழி கோவிந்தராஜனும்,பி.சுசீலாவும் இணைந்து பாடிய முதல் பாடல் இதுவே.
1957-ல் வெளி வந்த இத்திரைப்படத்தினை இயக்கியவர் சுப்பையா ராவ் அவர்கள். இப்படத்திற்கு இசையமைத்தவர் மாஸ்டர் வேணு அவர்கள்...

அற்புதமான இப்பாடலை இயற்றிவர் உடுமலை நாராயணகவி அவர்கள்... (தகவல் உதவி: சுக்ரவதநீ நண்பர். திரு எஸ். எஸ். பேராசிரியர் கந்தசாமி அவர்கள்)

'கெட்டும் பட்டணம் சேர்' எனும் பழமொழிப்படி பட்டணம் சென்று பிழைக்கலாம் என எண்ணும் விவசாயி ஒருவனுக்கு அவனது மனைவி, பட்டணத்து வாழ்வில் உள்ள தீமைகளை விளக்கி அறிவுரை கூறுகிறாள். (பட்டணம் என்பது இங்கே அயல்நாட்டினையும் குறிக்கும் என எடுத்துக் கொள்ளுங்கள்...)

கிராமத்தை விட்டுப் பட்டணம் சென்று சீர்கெட்டு மடியாமல் கிராமத்திலேயே விவசாயம் செய்து சிறப்பாக வாழலாம் என்று மனைவி சொல்லும் அறிவுரையை செவிமடுத்து, பட்டணம் போகும் தன் எண்ணத்தை மாற்றிக்கொள்கிறான் கணவன். மேலும் இப்பாடலில் தன் மனைவியை தாயே என்றும் அழைக்கிறான் கணவன்...

இச்சம்பவத்தை ஒரு நாட்டிய நாடக வடிவில் படமாக்கியுள்ளனர் இத் திரைப்படத்தில்... 


வரிகள் அத்துனையும் சாட்டையடி... உதாரணத்திற்கு...

வேலை ஏதுங்க கூலி ஏதுங்க..
வெக்கக்கேட்ட சொல்றேன் கேளுங்க - அங்கே
வேலை ஏதுங்க கூலி ஏதுங்க..
வெக்கக்கேட்ட சொல்றேன் கேளுங்க...
காலேஜ் படிப்பு காப்பி ஆத்துதாம்...
பிஏ படிப்பு பெஞ்சு தொடைக்குதாம்..
ஆளை ஏச்சு ஆளு பொழைக்குதாம்..
அஞ்சுக்கு ரெண்டு கஞ்சிக்கலையுதாம்..!''


எந்த கதாயாநகனும் தன்னை தாழ்த்தி வரும் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள மாட்டான்.. ஆனால் இப்பாடலில் கதாநாயகனே தன் மனைவியின் அறிவுரையால் திருந்தி, தனது தாழ் நிலையைக் கூறுகிறான்.. அடடா என சொல்ல வைக்கும் வரிகளும் இதிலுண்டு...

''நீ ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி..
நான் ஒண்ணுமே தெரியாக் கம்மனாட்டி - நீ
ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி
நான் ஒண்ணுமே தெரியாக் கம்மனாட்டி
ஊருவிட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமுன்னு
ஊருவிட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமுன்னு
உண்மையோட சொன்ன சொல்லு நன்மையாகத் தோணுது''



இந்த அருமையான பாடலுக்கு கிராமிய பிண்ணனிநில் துள்ளலிசையோடு வழங்கியிருக்கும் இசையமைப்பாளருக்கும், அட்டகாசமாய்க் குரல் கொடுத்த திரு. சீர்காழி கோவிந்த ராஜன், சுசீலா அவர்களுக்கும் ஒரு சலாம் போடலாம்...
இப்பாடலுக்கு குரல் கொடுத்த பெண் பாடகி சிலர் ஜமுனா ராணி என்றும், சிலர் சுசீலா என்றும் சொல்கின்றனர். யாழ் சுதாகரும் இதே கருத்தை வழி மொழிவதால்.. நானும் அதையே வழி மொழிகிறேன்... இந்த தகவல் தவறெனில் ஆதாரத்துடன் நிரூபிக்கவும்...

என்னுடன் சேர்ந்து நீங்களும் இப்பாடலை கேட்டு மகிழுங்கள். வேண்டுமெனில் இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..! உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..!


பட்டணம்தான் போகலாமடி பொம்பளே..! | Music Codes



Wednesday, 2 June 2010

ஆடி மாசம் பொறந்திருச்சு..! - திரைப்படப் பாடல்


''ஆடி மாசம் பொறந்திருச்சு..! ஏலேலோ அண்ணாத்தே..!'' கிராமிய பாணியில் வெளியான திரைப்படப் பாடல்தான் இது..! இது ஒரு துள்ளலிசைப் பாடலாகும்..!

ஆபாவாணன் தயாரிப்பு மற்றும் திரைக்கதை அமைப்பில், என்.கே. விஸ்வநாதன் இயக்கத்தில், 1990-ல்  வெளியான 'இணைந்த கைகள்' படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல் இது... இப்பாடலுக்கு இசையமைத்திருப்பவர் ஆபாவாணனின் ஆஸ்தான இசையமைப்பாளரான மனோஜ் கியான் அவர்கள். அதுசரி இப்பாட்டை யார் எழுதினாங்கன்னுதான கேக்கறீங்க... இப்படத்தின் தயாரிப்பாளரான ஆபாவாணன்தான். குரல் கொடுத்தவர் நமது
கங்கை அமரன்.

இப்பாடலில் கிராமிய இசைக் கருவிகளான... நையாண்டி மேளம், நாதஸ்வரம், சலங்கை இசையென அடி பின்னியெடுத்திருப்பார்கள்..!

எனக்குப் பிடித்த இப்பாடலை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் கேட்டு  மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து  கொள்ளுங்கள்..! மேலும்,  உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..! இயன்றவரை நான் தருகிறேன்..! 


ஆடி மாசம் பொறந்திருச்சு..! | Music Codes




Monday, 5 April 2010

ஒண்ணாம் படியெடுத்து..! - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் கிராமியப் பாடல்


கிராமியப் பாடல்களை பட்டி தொட்டியெங்கும் பரப்பியவர்களில் திருமதி. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினருக்கும் பங்கு உண்டு...

அக்குழுவினரின் துள்ளலிசைப் பாடல் வரிசையில் இதோ ஒரு பாடல்... 'ஒண்ணாம் படியெடுத்து... ஒசந்த பூவாம்..' 
 
ஒண்ணாம் படியிலிருந்து மெல்லிசையாக ஆரம்பிக்கும் இப்பாடல்..ஓவ்வொரு படியாக ஏறியபடியே...துள்ளலிசையாக மாறும்... இப்பாடலை
கேட்டாலே போதும்... தானாக உங்கள் மனமும் உடலும் துள்ளாட்டாம் போடும்...

என இப்பாடலில் நையாண்டி மேளம், உருமி மேளம் போன்ற கிராமிய இசைக் கருவிகள் தனி ஆவர்த்தனம் செய்திருப்பது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும்...

திருமதி விஜயலட்சுமியும், அவரது குழுவினரும் சேர்ந்து... தமிழக கிராமத்து, காவல் தெய்வங்களின் பேர்களை ஒவ்வொரு படியிலும் சொல்லியபடியே பாடி அசத்துவார்கள்... இடையே வரும் பெண்களின் குலவை சத்தம் நம்மை உசுப்பேற்றும்... சிலிர்ப்பூட்டும்..!

அன்பான புயல் அவர்களுக்கு...

இப்பாடலை தாங்கள் என்னிடம் கேட்டு இரு மாதங்களாகி விட்டது.. எனது தேடலில்தான் இவ்வளவு தாமதம் நண்பரே... இதில் கொடுமை என்னவெனில்.. எனது சேமிப்பில் ஏறகனவே இப்பாடல் இருந்திருக்கிறது.. இது தெரியாமல் எங்கெங்கோ (இரு மாதங்களாக) தேடித் தொலைத்திருக்கிறேன்... என் பிழை பொருட்டு எனை மன்னிக்க வேண்டுகிறேன்...

இவருடன்  சேர்ந்து நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாய் பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


ஒண்ணாம் படி எடுத்து..! - கிராமியப் பாடல் | Music Upload
 
 
நன்றி: திருமதி. விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் & குழுவினர்
----------
Blogger FloraiPuyal said...
விஜயலட்சுமியின் ஒண்ணாம் படியெடுத்து என்று தொடங்கும் பாடல் கிடைக்குமா? மற்றும் வெண்பாவிலமைந்த திரைப்பாடல் ஏதும் இருக்கிறதா? நன்றி.
23 January 2010 03:30




Friday, 26 March 2010

சின்னக்குட்டி நாத்தனா... சில்லறைய மாத்துனா..! - பழைய திரைப்படப் பாடல்


மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் எண்ண வண்ணம்தான், இந்த  'சின்னக்குட்டி நாத்தனா... சில்லறைய மாத்துனா..!' பாடல்.  இடம் பெற்ற திரைப்படம்: ஆரவல்லி (1957), அட்டகாசமான பாடலுக்கு துள்ளலிசையை அமைத்தவர் திரு. ஜி. ராமநாதன் அவர்கள். குரல் வழியே குதுகலப்படுத்தியவர். திரு. திருச்சி லோகநாதன் அவர்கள்.தயாரிப்பு: டி.ஆர்.சுந்தரம்(சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்).

மிகவும் எளிமையான வரிகளும், சிறப்பான இசையும்... இப்பாடலை அக்காலத்தில் பட்டி தொட்டியெங்கும் பரப்பியது என்றால் அது மிகையில்லை. எனக்குப் பிடத்த பாடல்களில் இதுவும் ஒன்று..!

இதில் கதாநாயகியாக நடித்தவர், ஜி.வரலட்சுமி. அவருடைய தங்கையாக மைனாவதி நடித்தார் (இவர் நடிகை பண்டரிபாயின் தங்கை)... பெண்களின் ராஜாங்கம்தான் எப்படி இருக்கும். ஒரு நாட்டை பெணகளே ஆண்டு வந்தால் எப்படி இருக்கும் எனபதுதான் கதை. ஆண்கள் எல்லோரும் இப்படத்தில் வீட்டிலிருந்தபடி சமைப்பார்கள். பெண்கள் காவல் காக்க வீரர்களாகச் செல்வார்கள். (இந்த தகவல் மட்டும் சரிதானா என்பதை விபரமறிந்தவர்கள் பின்னூட்டத்தில் கூறினால் நலம்..)

இப்பாடல் உருவான விதம் ஒரு சோகம் கலந்த சுவரசியமாகும்... இதோ

ஒரு சமயம் பொதுவுடமை இயக்கத்திற்காக நாடகம் நடத்த சென்றிருந்த பட்டுக்கோட்டையார் நாடகத்திற்கு சரியான வசூல் இல்லாமல் தங்கள் குழுவினருடன் பசி, பட்டினியுமாக சென்னை திரும்ப பேருந்தில் ஏறினார். பேருந்தில் அமர்ந்திருந்த தங்கள் குழுவினர் அனைவரும் சோர்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள். அவர்கள் சோகத்தை மாற்றி அவர்களுக்கு குதூகலத்தை தர பட்டுக்கோட்டையார் அங்கேயே ஒரு பாடல் எழுதி, அதனை சத்தமாக பாட ஆரம்பித்தார். அந்த பாடலை கேட்டதும் நாடக குழுவினருக்கு பசி பறந்துவிட்டது. அனைவரும் குதூகலமாக கைகளை தட்டி பாட ஆரம்பித்தார்கள்.

'சின்னக்குட்டி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போற வண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா!'

இந்த பாடலை கேட்டு மகிழ்ந்து அவரது குழுவினர், 'அண்ணே பாட்டு ரொம்ப அருமையா இருக்கு. இந்தப் பாட்ட அப்படியே ஒரு படத்துக்கு குடுங்கண்ணே'' என்று கேட்டுக் கொண்டார்கள். அதன்படியே அந்தப் பாடலை மாடர்ன்ஸ் தியேட்டர் தயாரித்த 'ஆரவல்லி' படத்திற்கு தந்துவிட்டார் பட்டுக்கோட்டையார்.






Tuesday, 2 March 2010

ஆத்தோரம் தேக்கு மரம்..! - கிராமியப் பாடல்


கலைமாமணி திரு. புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல் வரிசையில் இதோ மற்றுமொரு துள்ளிலிசைப் பாடல்... 'ஆத்தோரம் தேக்கு மரம்..!'

இப்பாடலில் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, நம் மூவேந்தர்களின் காலமான பாண்டியர், சோழர், சேரர் காலத்தில் நடைபெற்ற விவசாயமும்... அதனால் விளைந்த நன்மைகளையும் பற்றி, அவரது குழுவினருடன் அழகாகப் பாடுகிறார்..!

இபுபாடலில் 'தங்கமே தை...லால..!' என சங்கதி வைத்து பாடும் புஷ்பவனம் குப்புசாமியின் குரல் கிராமியத் தேன் பாகு...!

சலங்கை இசை, குழலிசை என மிக அருமையான கிராமத்து மெல்லிசையுடன்  உங்களைத் துள்ளாட்டம் போட வைக்க வருகிறது இப்பாடல்... கேட்டு மகிழுங்க...  தேவையெனில் தரவிறக்கமும் செஞ்சிக்கோங்க..!



நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர்




Thursday, 25 February 2010

சந்தையில வாங்கி வந்த..! - கிராமியப் பாடல்


கலைமாமணி திரு. புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல் வரிசையில் இதோ மற்றுமொரு துள்ளிலிசைப் பாடல்... 'சந்தையில வாங்கி வந்த சரி ஜோடி காளைகளா..!'

இப்பாடலில் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, ஒரு கிராமத்து இளைஞனின் காதலை, அவன் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் அழகை மிக அழகாகப் பாடுகிறார்... அதுவும் அந்த இளைஞன் அவனது காளைகளுடன் பேசிக் கொள்வது போல் அமைந்திருக்கிறது இப்பாடல்.!

மிக அருமையான கிராமத்து துள்ளலிசையுடன்  உங்களைத் துள்ளாட்டம் போட வைக்க வருகிறது இப்பாடல்... கேட்டு மகிழுங்க... அப்புறம் சொல்வீங்க..!




சந்தையில வாங்கி வந்த... | Music Upload

நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர் 




Monday, 22 February 2010

ஆத்து மணலிலே கோட்டை கட்டி..! - கிராமியப் பாடல்


கலைமாமணி திரு. புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல் வரிசையில் இதோ மற்றுமொரு பாடல்... 'ஆத்து மணலிலே கோட்டை கட்டி..!'

இப்பாடலில் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மிக அழகாகப் பாட, அதை அப்படியே அவரது பின் பாட்டு பாடும் குழுவினர் பாடுகிறார்கள், மெல்லிசையுடன் ஆரம்பிக்கும் இப்பாடல்... போகப் போக துள்ளலிசைப் பாடலாக மாறும்.. அது ஒரு தனி இசைச் சுகம்..!

மிக அருமையான கிராமத்து மெல்லிசையுடன் கலந்த துள்ளலிசைப் பாடலாக... இப்பாடல் உங்கள் செவிகளை வருட வருகிறது... கேட்டு மகிழுங்க... அப்புறம் சொல்வீங்க..!


ஆத்து மணலிலே கோட்டை கட்டி... | Music Upload

நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர்



Thursday, 18 February 2010

அறிவோம் நன்றாக... அறிவோம் நன்றாக..! - கிராமியப் பாடல்


கலைமாமணி திரு. புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல் வரிசையில் இதோ மற்றுமொரு பாடல்... 'அறிவோம் நன்றாக... அறிவோம் நன்றாக..!'

எப்பாடலிலும் பாடகர் பாடியதைத்தான், பின் பாட்டு பாடும் குழுவினர் பாடுவார்கள்... இப்பாடலில் அப்படியில்லை... பாடகர் பாடுவதை குழுவினர் பாடுவர், பின் குழுவினர் பாடுவதை பாடகர் பாடுவார்...துள்ளலிசையின் ஆரம்பிக்கும் பாடல்... போகப் போக துடிப்பான இசையாக மாறும்.. அது ஒரு தனி இசைச் சுகம்..!

மிக அருமையான கிராமத்து துள்ளலிசையுடன்... இப்பாடல் உங்கள் செவிகளை வருட வருகிறது... கேட்டுப் பாருங்க... அப்புறம் சொல்வீங்க..!


அறிவோம் நன்றாக..! | Music Upload

நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர்.



Tuesday, 12 January 2010

மணப்பாறை மாடு கட்டி.. மாயவரம் ஏரு பூட்டி..! - பழைய திரைப்படப் பாடல்


'திரைக்கவித் திலகம்' என அழைக்கப்பட்ட கவிஞர் மருதகாசியின் வரிகளில் மின்னிய அருமையான விவசாயம் சார்ந்த சினிமாப் பாடல்தான்... இந்த
''மணப்பாறை மாடு கட்டி.. மாயவரம் ஏரு பூட்டி.. வயக்காட்டை உழுது போடு செல்லக்கண்ணு!'' பாடல்

ஏ.பி.நாகராஜனும், வி.கே.ராமசாமியும் சேர்ந்து “லட்சுமி பிக்சர்ஸ்” என்ற படக்கம்பெனியை தொடங்கி, “மக்களைப் பெற்ற மகராசி” படத்தைத் தயாரித்தனர். இதில் சிவாஜிகணேசனும், பானுமதியும் இணைந்து நடித்தனர்.

இந்தப்படத்தில் இடம் பெற்ற பெரும்பாலான பாடல்களை மருதகாசி எழுதினார். குறிப்பாக, “மணப்பாறை மாடுகட்டி, மாயவரம் ஏரு பூட்டி” என்ற பாட்டு, மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது.

1957-ல் வெளியான இப்படத்திற்கு இசையமைத்தவர், திரை இசைத் திலகம் கே.வி. 
மகா தேவன் அவர்கள். பாடியிருப்பவர் நமது டி.எம் சௌந்திர ராஜன்தான்.
இப்பாடலில் வரும் வரிகள் அனைத்தும் வைரம்... உதாரணத்திற்கு

''ஆத்தூரு கிச்சடி சம்பா...
பாத்து வாங்கி வெதை வெதச்சி'
' நான் பிறந்த ஊர் இது என்பதில் எனக்கு ஒரு தனி சந்தோசம் 

"சேத்த பணத்தை சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையிலே கொடுத்து போடு சின்னக்கண்ணு" என்பார் மருதகாசி.
             


மணப்பாறை மாடு கட்டி..! | Upload Music

கேட்டுப் பாருங்க.. உங்க கருத்தைச் சொல்லுங்க..! 


(இப்பாடலை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதியதாக தவறுதலாக இப்பதிவில் இட்டிருந்தேன்... இன்றுதான் அதன் உண்மை நிலை 30.11.2010 தெரிந்தது... மாற்றி விட்டேன்... தவறுக்கு மன்னிக்க வேண்டுகிறேன் தோழர்களே...)


இப்பாடலின் திரை வடிவம் இதோ..!