'அட என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி... யாரு வச்ச மையி... இது நான் வச்ச மையி...' என்ற உண்மையான கிராமியப் பாடலை இன்று என் விருப்ப பாடலாக பதிவிலிடுகிறேன்.
என்னுடைய சிறுவயதில் கேட்ட பாடல். ஊர் திருவிழாவின் போது இப்பாடலை அடிக்கடி ஒலிபரப்புவார்கள். கேட்கவே இனிமையாக இருக்கும். டி.கே.எஸ். நடராஜன் என்ற கிராமியப் பாடகர் பாடிய பாடலிது. இவர் வெளியிட்ட நாட்டுப்புற தெம்மாங்கு என்ற கிராமிய இசைத் தொகுப்பில் இப்பாடல் இடம்பெற்றிருக்கிறது.
இப்பாடல் ஏதோ ஒரு சினிமாவில் இடம் பெற்ற பாடலோ என்று என்னுடைய சிறுவயதில் நினைத்துக் கொள்வேன். அப்போதெல்லாம் யாரேனும் கண்ணில் அதிகமாக மை வைத்துக் கொண்டு தெருவில் வந்தால் (என் வயது பெண் பிள்ளைகளைத்தான்) இந்தப் பாடலைத்தான் பாடி கிண்டல் பண்ணுவோம்.
அருமையான கிராமிய இசையும், டி.கே.எஸ். நடராஜன் அவர்களின் வெண்மணிக் குரலும் நம்மை மெய்மறக்கச் செய்து விடும். தன் கிராமத்து கட்டழகியை அவர் வர்ணிக்கும் விதமே தனி அழகு.
எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள். பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்.