"சொந்தமும் இல்லே ! ஒரு பந்தமும் இல்லே !
சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார் ! என்ற பாடலை இன்று நேயர் விருப்பப் பாடலாகப் பதிவிலிடுகிறேன்.
1965-ல் வெளியான ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற அட்டகாசமான பாடல் இது. கவியரசர் கண்ணதாசன் எழுதிய இப்பாடலுக்கு அற்புதமாக இசையமைத்தவர்கள் மெல்லிசை மன்னர்களான எம்.எஸ்.வியும் ராமமூர்த்தியும். இப்பாடலைப் பாடியவர்கள் ஜி.கே.வெங்கடேஷ் குழுவினர் ஆவர்...
இப்பாடலின் வரிகளொவ்வொன்றும் வைரம்தான்
'(முடியை) வளர விட்டால் மனிதரெல்லாம் குரங்குகளாவார்...
நாங்கள் வழித்து விட்டால் மறுபடியும் மனிதர்கள் ஆவார்...'
முடியினை வாழ்வியலுக்கு ஒப்பிட்டு
'உள்ள இடத்தில் உள்ள வரைக்கும்
இந்த உலகம் உன்னை மதிக்கும்
இடத்தை விட்டு இறங்கி விட்டால் ஏறி மிதிக்குமே' என்று சுட்டியிருப்பார் கவிஞர் கண்ணதாசன். (இப்பாடலை இயற்றியது பட்டுக்கோட்டையார் இல்லை.)
இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாகக் கேட்ட அன்பு நண்பர் சுந்தரம் சிங்காரம் அவர்களுக்கு எனது நன்றிகள்.
அவருக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... உங்களுக்குப் பிடித்திருப்பின் இலவசமாகப் பதிவிறக்கமும் செயது கொள்ளுங்கள்...
சொந்தமுமில்லே... ஒரு பந்தமுமில்லே..! | Upload Music
------------
Sundaram Singaram said...
dear sir
@1952- முதல் பணம் என்ற திரைப்படத்தின் மூலம் இசை சாம்ராஜ்ஜியத்தைத் தொடங்கிய மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகியோரின் இசைப்பயணம் இப்படத்தோடு முடிந்து போனது. இவர்கள் ஒன்றாக இணைந்து இசை அமைத்த கடைசி படம் இது. இதன்பிறகு இருவரும் தனித்தனியே இசையமைக்க ஆரம்பித்தனர்.
@இப்பாடலில் எம்.ஆர்.ராதா நடிக்கப் போகிறார். இவருக்கு ஏற்ற குரலை எங்கே தேடுவது, யாரைப் பாடுவது என்ற குழப்பம் வந்திருக்கிறது. கடைசியில் எம்.எஸ்.வி.யிடம் உதவியாளராக இருந்து பின்னாளில் அவரது இசை வாரிசாக பரிமளித்த இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் அவர்களை, இப்பாடலைப் பாடுவதற்கு எம்.எஸ்.வி. தேர்வு செய்தார். இவரும் இவரது குழுவினரும் இப்பாடலை பாடுகையில் அமர்க்களம் செய்திருப்பார்கள்... கோரஸில் பின்னியெடுத்திருப்பார்கள்...
@ இப்படத்தின் இயக்குனர் கே.ஜே. மகாதேவன் அவர்கள். இப்படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். 1939-ல் கல்கியின் படைப்பான தியாகபூமியை திரைப்படமாகத் தயாரித்தார்கள். இப்படம் வெள்ளையர்களால் தடை செய்யப்பட்டு, இந்திய விடுதலைக்குப் பின் மீண்டும் வெளியிடப்பட்டது. இப்படத்தின் கதாநாயகனாக நடித்தவர்தான் இந்த கே.ஜே. மகாதேவன் அவர்கள்.
@நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்த வேடங்களிலேயே, இப்படத்தில் நடித்த வேடம்தான் எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று அவரே குறிப்பிட்டிருக்கிறார்.
@ இப்படம் ஆங்கில எழுத்தாளர் P.G. Wodehouse எழுதிய 'If I Were You' என்ற ஆங்கில நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.
இப்பாடலின் திரை வடிவம் இதோ..:
(ஒலி மற்றும் திரை வடிவம் கொடுத்து உதவிய சுக்ரவதனீ குழுமத்தின் பேராசிரியர் அவர்களுக்கும் எம்.கே.சாந்தாராம் அவர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..!)